|
பொருட் பொருத்தமும் இதுபோன்று
இன்றாம். ஆகலான் இவ்வாறான வரலாற்றுண்மையை
ஒளவையார் அதிகமான் இடத்தும், கபிலர்
பாரியிடத்தும், மோசிகீரனார் சேரமான்
தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையிடத்தும்,
பிசிராந்தையார் கோப்பெருஞ் சோழனிடத்தும்,
பிறரிடத்தும் காண்க. ஆகலான் அவ்வாறு பொருள்
கொள்ளுதற்குச் சிறப்பின்மை தெளியலாம்.
இருதுபன்னன், வீமமன்னனுடைய நகரடைதல்
382. ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும்
காமர் நெடுநாடு கைவிட்டு - வீமன்றன்
பொன்னகரி சென்றடைந்தான் போர்வெட் டெழுங்கூற்றம்
அன்னகரி ஒன்றுடையான் ஆங்கு.
(இ - ள்.) போர் வேட்டு எழும்
கூற்றம் அன்ன - போரினை விரும்பி மேலெழுந்து
வருகின்ற இயமனையொத்த, கரி ஒன்று உடையான் -
பட்டத்து யானை ஒன்றையுடையவனாகிய இருதுபன்ன
மன்னன், ஆமை முதுகில் அலவன் துயில்கொள்ளும் -
ஆமையின் முதுகினிடத்தே நண்டுகள் உறங்குகின்ற
நீர்வளமிக்க, காமர் நெடு நாடு கைவிட்டு - அழகான
பெரிய கோசல நாட்டைவிட்டு நீங்கி, வீமன் தன்
பொன்னகரி சென்று ஆங்கு அடைந்தான் -
வீமமன்னனுடைய விதர்ப்ப நாட்டின் அழகிய நகரான
குண்டினபுரத்தின் இடத்தே சென்று சேர்ந்தான்.
(க - து.)இயமனையொத்த பட்டத்து
யானையையுடைய இருதுபன்ன அரசன், தன் கோசலநாடு
கடந்து சென்று, வீமமன்னனது குண்டினபுர
நகரையடைந்தான் என்பதாம்.
(வி - ரை.) ஆமை முதுகில் நண்டுகள்
தூங்குதலாவது, கோசலநாட்டு மக்கள் பகையின்றி
ஒருவர்க்கொருவர் அன்புடையவராய் வாழுகின்ற நிலை.
இளங்கோவடிகள் ஆக்கியருளிய செஞ்சொற்
காப்பியத்தில், பாண்டியர் தம் ஆட்சிச்
சிறப்பைக் குறித்துக்கூறுங்கால், பாண்டிநாடு பகை
முதலியன இன்றிச் சிறந்து விளங்குவதாக அமைத்து,
1‘கோள்வல் உளியமும் கொடும்புற்
றகழா
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
1. சிலப், 13: 5 - 9.
|