|
னான வீமனுக்கு, தன் வரவு கூற பணித்து -
தன் வருகையை அறிவிக்கும்படி (வாயில்
காவலர்கட்குக்) கட்டளையிட்டு அனுப்பி, (தான்
தேரினின்றும் கீழிறங்கிச் சென்று), மகிழ்ந்து
தனி புக்கான் - மகிழ்வுகொண்டு தான் மட்டும்
(அரண்மனையினுள்) சென்றான்.
(க - து.)இருதுபன்னன், தான் வந்த
தேரை அரண்மனை முற்றத்திடத்தே நிறுத்திவிட்டுத்
தன் வருகையை வீமமன்னனுக்கு அறிவிக்கும்படி வாயிற்
காவலர்களிடம் கூறியனுப்பித் தான் மட்டும்
அரண்மனைக்குள் மகிழ்வோடு சென்றான் என்பதாம்.
(வி - ரை.) வெற்றித்தனித்தேர் -
தான் மட்டும் சுயம்வரமென்று
கேள்வியுற்றுச்சென்றவனாதலால் அதை விளக்க
வெற்றித் தனித்தேரென்றார். அன்றி, வெற்றி
பெறாத தன்மையைச் சுட்டிக் காட்டி இழிவு
சிறப்பாகக் கூறினாரென்றலுமாம். கோ+இல் -
கோயில் : அரசன் இல்லம். அது அரண்
சூழ்ந்திருப்பதால் அரண்மனையெனப்படும். பின்னரே
இறைவன் உறையும் கோட்டத்துக்கு ஆயிற்று. முற்றம் -
அரண்மனைவாசல் இடம். தன்வரவு கூறப்பணித்து
என்றமையால் அதற்கேற்ற எழுவாயாகக் காவலர் என்ற
சொல் வருவித் துரைக்கப்பட்டது. தனிப்புக்கான்
என்றமையால் தேரோட்டிவந்த நளன் உட்செல்லாது
வெளியே நின்றான் என்பது பெற வைத்தார்.
பணித்தல் . சொல்லுதல், ஏவுதல் என்னும்
பொருட்டாக வந்தது. மன் - நிலைபெறுதல். விரவுதல் -
கலத்தல், ஒன்றாதல், நிலைபெறுதல் என்பது மாலைக்கு
என்னையெனின்?, மாறாமல் என்றும் வீரத்திரு
நிலைத்திருக்க வாகை வனமாலை சூடி அரசர் உறைகின்ற
அத்தாணி மண்டபத்தே வீறுடன் இருத்தல். (50)
இருதுபன்னனை வீமன் வினவுதல்
384. கன்னி நறுந்தேறல் மாந்திக் கமலத்தின்
மன்னித் துயின்ற வரிவண்டு - பின்னையும்போய்
நெய்தற் கவாவும் நெடுநாட நீயென்பால்
எய்தற் கவாவியவா றென்.
(இ - ள்.) கமலத்தின் கன்னி நறும்
தேறல் மாந்தி - (இருது பன்னனை வீமன் நோக்கி)
தாமரை மலரில் உள்ள புதிய மணமுள்ள தேனைக் குடித்து,
மன்னிதுயின்ற வரிவண்டு - அதில்
|