|
வியப்பும் மகிழ்வும் தருவதாகும். வரி -
புள்ளிகள். பொறிவண்டு - அழகுள்ள வண்டுகள்
என்பதைக் குறித்தார். வண்டுகள் கள்ளுண்டு
உறங்குமென்பதனை,
1‘வேலை மடற்றாழை உட்பொதிந்த
வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு’
என்பது இளங்கோவடிகளாரின் இயற்கை
மொழி.
பின்னையும் என்பதிலுள்ள உம்மை
இறந்தது தழுவிய எச்சப் பொருளன்றி இழிவு
சிறப்புமாம் ; என்னை ? முன்பே தேன் உண்டது
போதாவென்று மேலும் விரும்புதல் ஒவ்வாதென்பதைக்
குறிக்க வந்ததாகலான். கமலம், நெய்தல் என்பன
அவ்வற்றின் மலருக்காதலால் ஆகுபெயர். எய்துதல் -
எய்தல் எனக்குறைத்தல் விகாரம் பெற்றது. என்,
என்னவென்னும் வினாவினைக் குறிப்பு. இதனால்
இருதுபன்னனை வந்த காரணம் என்ன வென்று
வீமன்கேட்டான் என்க. (51)
இருதுபன்னன் மறுமொழி கூறல்
385. இன்றுன்னைக் காண்பதோர் ஆதரவால் யான்இங்ஙன்
மன்றல் மலர்த்தாராய் வந்தடைந்தேன் - என்றான்
ஒளியார்வேற் கண்ணாள்மேல் உள்ளந் துரப்பத்
தெளியாது முன்போந்த சேய்.
(இ - ள்.) ஒளிஆர் வேல்
கண்ணாள்மேல் உள்ளம் துரப்ப - ஒளிபொருந்திய
வேல்போன்ற கண்களையுடைய தமயந்தியிடத்துத் தன்
உள்ளம் சென்றமையால், தெளியாது முன்போந்த
சேய்-முன் ஆராய்ச்சியின்றி வந்தவனான இருதுபன்ன
வேந்தன், மன்றல் மலர் தாராய் இன்று உன்னை
காண்பது ஓர் ஆதரவால்-மணங்கமழும்
மலர்மாலையணிந்த அரசனே ! இன்றைக்கு உன்னைக்
காணவேண்டுமென்னும் ஓர் ஆசை மிகுதியினால், யான்
இங்ஙன் வந்து அடைந்தேன் என்றான் - நான் இங்கே
வந்து சேர்ந்தேன் என்று கூறினான்.
(க - து.)முன்பின் ஆராயாது வந்த
இருதுபன்னன், ‘மலர்மாலையணிந்த வேந்தனே ! நான்
இன்று உன்னைப் பார்ப்பதற்கே வந்து சேர்ந்தேன்.
வேறு யாதுமில்லையென்று சொன்னான்’ என்பதாம்.
1. சிலப்; 6 : இறுதி வெண்பா.
|