பக்கம் எண் :

மூலமும் உரையும்491

ஆற்றி-முதன்மையான நீண்ட தேரில் பூட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு அவைகளை இளைப்பாற்றி, கோதுஇல் அடிசில் குறைமுடிப்பான் மதித்து - குற்றமற்ற சமையல் முடித்தலாகிய தான் செய்யவேண்டிய வேலையின் அறுகுறையை முழுதும் முடிப்பதற்கு எண்ணங்கொண்டு, மடைடடயில் புக்கான் - சமையலறைக்குச் சென்றான்.

(க - து.)வாகுகனாகிய நளன், தேர்க்குதிரைகளை அவிழ்த்துவிட்டு, அவைகளைக் களைப்பாற்றியபின் சமையல் தொழிலை முடிக்கக் கருதிச் சமையலறைக்குச் சென்றான் என்பதாம்.

(வி - ரை.) ஆதி - பழமையென்ற பொருளில் வாராது ஈண்டு முதன்மையென்ற பொருளில் வந்தது. மற்ற எல்லா வகைத்தேரினும் இஃது உயர்ந்ததென்னும் பொருளது என்பதை விளக்க நெடுந்தேர் என்னும் சொல்லாற் குறித்ததூஉமறிக. பரி - குதிரைகள் : சாதியொருமை. விட்டு - அவிழ்த்துவிட்டு என்னும் பொருளது. அவை : பன்மை. மேதி - எருமை. கடைவாயில் - வாயிற்கடை என மொழி மாற்றுக : இது சொல்நிலை மாறிய இலக்கணப் போலி. கார்நீலம் - கருநிறமுள்ள குவளைமொட்டு. குவளை தன் அரும்பு அவிழ்ந்து மலர்தலை ‘கண் விழிக்கும்’ என்றார். அது இளநங்கையர் இருவிழி போன்றிருத்தலால் ‘கண்’ என்றார் : உவம ஆகுபெயர். குவளையை மேய்ந்து செல்லும் எருமைகள், தம் வாயிற்கொண்ட குவளைக் கொடிகளைச் சிறிது சிறிதாக மென்றுகொண்டு வாய்க்குள் அடக்குங்கால் அக்கொடிகளில் மலரும் பருவத்திலுள்ள பேரரும்புகள் அவ்வதிர்சியினால் மலர்கின்றன. அத்தகைய நீர்வளனும் நிலவளனுஞ் செறிந்தநாடு, நிடதநாடு ; அந்நாட்டுக்குரிய வேந்தன்
இன்று என்ன செய்கின்றான்? தேர்ஓட்டுகின்றான் ; குதிரையை
அவிழ்த்து விடுகின்றான் ; அவைகட்குக் களைப்பாற்றுகின்றான் ; பின்னர் மடைத்தொழில் புரிகின்றான் எனக் கழிவிரக்கங் கொள்வாராய், அவன் அரசாட்சிச் சிறப்பும் பண்பும் பிறவும் கூறி, இவ்வாறு ‘கடைவாயில்........மதித்து’ என்றார். புகு+ஆன் - புக்கான் எனத் தன்னொற்றிரட்டி இறந்தகாலம் காட்டிற்று, நக்கான் என்பதுபோல. (53)

வாகுகன் சமையல் தொழிலால் சோறு கறிகள் நிரம்புதல்

387. ஆதி மறைநூல் அனைத்தும் தெரிந்துணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம்போல் - யாதும்
நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொற்றேர்
வரப்பாகன் புக்க மனை.