|
லான், ‘இல்லையென்றிரப்போர்க்கு
இல்லையென்றுரையாத இதயம்’ படைத்தவன். இது
குறிப்புவினையாலணையும் பெயர். அயிர்த்தல் -
சந்தேகித்தல். கோமான் - தலைவன் ; மன்னன்.
மடைத்தொழில்கள் என்று பன்மையாற் கூறியது, சோறு
கறி குழம்பு முதலியவற்றை ஆக்குதலான் என்க.
தமயந்தி தன் கணவன் தன்னைக் காட்டில் நடுஇரவில்
தன்னந்தனியாக விட்டுச் சென்றதுமுதல் அவனையே
நினைந்து நினைந்து மனம் உடைந்து போய் வருந்திய
வண்ணமாயிருந்தாளாதலான், ‘நைகின்ற நெஞ்சான்’
என்ற பெயர் கொடுத்துரைத்தார். ‘தெரிந்துணர்ந்துவா’
என்னும் முன்னிலை ஏவலொருமை வினைகொண்டு
எழுவாயுருபாகத் தோழியென்று
வருவித்துரைக்கப்பட்டது. நயப்பு - விருப்பம். அது
நயந்து என வினையெச்சமாயிற்று. (55)
தமயந்தி, மற்றொரு தோழியை அனுப்பி
வாகுகனிடம்
தன் மக்களை விட்டுவரக் கூறுதல்
389. கோதை நெடுவேல் குமரனையும் தங்கையையும்
ஆதி அரசன் அருகாகப் - போத
விளையாட விட்டவன்றன் மேற்செயல்நா டென்றாள்
வளையாடும் கையாள் மதித்து.
(இ - ள்.) வளை ஆடும் கையாள் மதித்து
- வளையல்கள் மேற் போவதும் கீழிறங்குவதுமாக
அசைந்தோடிக் கொண்டிருக்கின்ற கைகளையுடைய
தமயந்தியானவள் நன்றாக எண்ணி முடிபு செய்து, கோதை
நெடுவேல் குமரனையும் தங்கையையும் - மலர்
மாலையணிந்த நீண்ட வேலினையுடைய மகன்
(இந்திரசேனனையும்) அவன் தங்கை (இந்திரசேனை)
யையும், ஆதி அரசன் அருகு ஆக போக விளையாடவிட்டு
நம் முன்னை அரசனென்று கருதப்படுகின்ற வாகுகன்
பக்கத்தில் விளையாடும்படி விட்டுவிட்டு, அவன்
மேல் செயல்நாடு என்றாள் - அதற்குமேல் அவனுடைய
செய்கைகளைக் கண்டறிந்து வருகவென்று (பின்னுமோர்
தோழியிடம்) சொல்லியனுப்பினாள்.
(க - து.) தமயந்தியானவள்,
பின்னுமோர் தோழியை நோக்கி, ‘என் மகனையும்
அவன் தங்கையையும் எம் கணவனென்று ஐயங்கொண்டுள்ள
அரசன்பால் கொண்டு போய் விளையாட விட்டுவிட்டு
மேல் நடக்கின்றவைகளைக் கண்டறிந்து வா’ வென்று
கூறியனுப்பினாள் என்பதாம்.
|