பக்கம் எண் :

மூலமும் உரையும்495

(வி - ரை.) கோதை - மாலை. அரசர்கட்கு வேல்தாங்குதல் மரபாகலான் இவன் அரசகுமரன் ஆதலால் அவ்வடை கொடுத்துக் கூறப்பட்டது. தமயந்தி தன் மக்கள் இருவரையும் தன் கணவனென்று ஐயப்படுகின்ற வாகுகன்பால் அனுப்பி விளையாடவிட்டு, மேல் அங்கு நிகழ்வதை அறிந்து வருகவென்று தோழியொருத்தியை அனுப்பினாளெனக் கொள்க. ஆதி அரசன் - முன்புள்ள மன்னன். வளையாடுதல் - வளையல்கள் அசைந்துகொண்டு செல்லுதல். அன்றிச் சங்க இரேகையுள்ள கையென்றலுமாம். 1‘விளையாடும் வண்கைப் பொலன்சங் கொடும்
பொங்க’ என்றார் குமரகுருபர அடிகளாரும். போத : புகுத என்பதன் மரூஉ மொழி. (56)

வாகுகன், மக்களைத் தழுவிக்கொண்டு அவர்களை வினவல்

390. மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்
என்மக்கள் போல்கின்றீர் யார்மக்கள் என்றுரைத்தான்
வன்மக் களியானை மன்.

(இ - ள்.) வன்ம களியானை மன் - பகைமைத் தன்மை கொண்ட மதயானையையுடைய வாகுகனான நளமன்னன், மக்களை முன்காணா - தன் புதல்வர்களைத் தன் எதிரே கண்டு, மனம் நடுங்கா வெய்து உயிரா - (வருத்தங்கொண்டு) மனம் பதைத்துப் பெரு மூச்சுவிட்டு, புக்கு எடுத்து வீரபுயத்து அணையர் - (விரைந்து அவர்பாற்) சென்று அவர்களைத் தூக்கியெடுத்து வீரமிக்க தன் தோள்களில் அணைத்துக்கொண்டு, மக்காள் - குழந்தைகளே ! நீர் என் மக்கள் போல்கின்றீர் - நீவிர் இருவரும் என் புதல்வர்களைப் போலவே இருக்கின்றீர், யார் மக்கள் என்று உரைத்தான்-(நீவிர்) யார் பெற்ற மக்கள் என்று கேட்டான்.

(க - து.) வாகுகன், மக்களைக் கண்டவுடன் மனம் நடுங்கிப் பெருமூச்சுவிட்டு விரைந்தோடித் தூக்கியெடுத்து, ‘நீர் இருவரும் என் மக்களைப்போலவே இருக்கின்றீர் ; நீர் யார் பெற்ற புதல்வர்கள் ?’ என்று கேட்டான் என்பதாம்.

(வி - ரை.) நடுங்கா உயிரா அணையா என்பன செய்யா என்னும் வாய்ப்பட்டு வினையெச்சம். நளன் தன் மக்களைக்

1. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - 84.