|
கண்டதும் அந்தோ இத்தகைய
புதல்வர்களையும் காலக்கோட்பாட்டால் பிரிந்து
இருக்க நேர்ந்ததேயென்று மனத்தில்
வருத்தங்கொண்டானாதலால் ‘மனம் நடுங்கா’
என்றார். வருத்தம் மிகுந்தவிடத்துப் பெருமூச்சு
விடுவது இயல்பு. 1‘ஊதுலைக் குருகின் உயிர்த்தனன்’
என்றார் இளங்கோவடிகளும். உடனே,
விரைந்தெடுத்துத் தழுவி அக்குழந்தைகளின்
மொழிகளைக் கேட்க விரும்பி ‘என் மக்கள்
போல்கின்றீர் யார் மக்கள்?’ என்று வினவினான்
என்க. முற்றத்துறந்த முனிவர்களாயினும்
குழந்தைமேல் பற்றறுதல் கூடாததும் முடியாதது
மாகுமாதலால் நளனுக்குத் தன் மக்களைக் கண்டதும்
மனம் உருகிற்றென்க. நைடதக் காப்பியத்தில்
நளன் தன் மக்களைக் கண்டதும், வருந்தி நின்ற
நிலையை,
2‘அடைந்த மக்களைக் காண்டலும் அழலிடு மெழுகின்
உடைந்த துள்ளம்நீர் ஊற்றிருந்
தொழுகின நெடுங்கண்’
என்றதும் காண்க. (57)
வாகுகனுக்குப் புதல்வர்கள் மறுமொழி
கூறல்
491. மன்னன் நிடதத்தார் வாழ்வேந்தன் மக்கள்யாம்
அன்னை தனைக் கான்விட் டவன்ஏக - இந்நகர்க்கே
வாழ்கின்றோம் எங்கள் வளநாடு மற்றொருவன்
ஆள்கின்றான் என்றார் அழுது.
(இ - ள்.) (பிள்ளைகள் நளனை
நோக்கி) மன்னன் நிடதத்தார் வாழ்வேந்தன்
மக்கள் யாம் - நாங்கள் பேரரசனும் நிடத நாட்டு
மக்கள் வாழ்வுக்குக் காரணனுமாகிய நளமன்னனுடைய
புதல்வராவோம், அவன் அன்னைதனை கான்விட்டு ஏக -
அவ்வேந்தன் எம் தாயாகிய தமயந்தியைக் காட்டில்
விட்டுவிட்டுப் பிரிந்து செல்ல, இந்நகர்க்கே
வாழ்கின்றோம். இந்தக் குண்டினபுரத்தில் (எம்
அன்னையாரோடு) வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்,
எங்கள் வளநாடு மற்று ஒருவன் ஆள்கின்றான்
என்றார் அழுது - எங்களுடைய செழிப்புமிக்க நிடத
நாட்டை வேறோர் அரசன் இப்போது ஆட்சிபுரிந்து
வருகின்றான் என்று அழுதபடியே கூறினார்கள்.
(க - து.) ‘நாம் நிடதநாட்டுக்கு
வேந்தனான நளனுடைய மக்கள் ; நாங்கள் எம்
அன்னையாரோடு இந்நகரில்
1. சிலப், 13 : 45. 2. நைடதம் : தேவியை : 15.
|