|
மக்கள் மொழியைக்கேட்ட வாகுகன்
வருந்துதல்
392. ஆங்கவர் சொன்ன உரைகேட் டழிவெய்தி
நீங்கா உயிரோடு நின்றிட்டான் - பூங்காவின்
வள்ளம்போல் கோங்கு மலரும் திருநாடன்
உள்ளம்போல் கண்ணீர் உகுத்து.
(இ - ள்.) பூங்காவில் வள்ளம்போல்
கோங்கு மலரும் திருநாடன் - பூஞ்சோலைகளில்
கிண்ணம் போன்று கோங்கரும்புகள் மலர்கின்ற
அழகிய நிடதநாட்டு வேந்தனாகிய நளன், ஆங்கு அவர்
சொன்ன உரைகேட்டு அழிவு எய்தி - அவ்வாறு அழுதபடியே
அக்குழந்தைகள் கூறிய சொற்களைக் கேட்டுணர்ந்து
மனச்சோர்வுற்று வருந்தி, உள்ளம்போல் கண் நீர்
உகுத்து - தன்மனம் உருகி வழிவதுபோலத் தன்
கண்ணீர் கலகலவென்று பாய்ந் தோடச்சொரிந்து,
நீங்கா உயிரோடு நின்றிட்டான் - தன் உடலை
விட்டுச் செல்லாமல் (ஊசலாடிக்கொண்டிருக்கின்ற)
உயிரோடு ஒன்றும் தோன்றாமல் அசைவற்று
நின்றுகொண்டிருந்தான்.
(க - து.) பிள்ளைகள் சொன்ன
அம்மொழியைக் கேட்ட நளமன்னன், மிக
வருத்தங்கொண்டு கண்ணீர் சொரிந்து
ஊசலாடிக்கொண்டிருக்கும் உயிரோடு நின்று
கொண்டிருந்தான் என்பதாம்.
(வி - ரை.) ஆங்கு - அவ்விடம் என்று
பொருள் கூறலுமாம். அழிவு எய்தல் -
வருத்தங்கொள்ளல். நீங்கா உயிர் என்பதில்
கடைக்குறைந்து நின்றது: எதிர்மறைப் பெயரெச்சம்.
நின்றிட்டான் என்பதிலுள்ள இடு, பகுதிப்பொருள்
விகுதி. இடுபகுதிப் பொருளல்லவென்று
மயங்குவாருமுளர். வள்ளம் - கிண்ணம். கோங்க மலர்
கிண்ணம் போன்றிருத்தலால் உவமவுருபு கொடுத்துக்
‘கிண்ணம்போல் கோங்குமலரும்’ என்றார். தன்
மக்களை நேரில் கண்டதும் மனமுருகிக் கரைய
நின்றான் ஆதலால், அன்பினாற் கண்ணீர் வார
நின்ற செயலுக்குத் தொழிலுவமமாக்கி ‘உள்ளம்போல்’
என்று கூறினார்.
1‘அன்பிற்கும் உண்டோ
அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.’
என்பது தேவர் மறையாகலான், அன்புக்கு
அடையாளமாகக் ‘கண்ணீர் உகுத்’தென்ற
சொற்பெய்து உரைத்தார். (59)
1. திருக்குறள் : 71.
|