|
வாகுகன், குழந்தைகளைப் பார்த்து
வினாவுதல்
393. உங்கள் அரசொருவன் ஆளநீர் ஓடிப்போந்
திங்கண் உறைதல் இழுக்கன்றோ - செங்கை
வளவரசே என்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற
இளவரசை நோக்கி எடுத்து.
(இ - ள்.) மாதவத்தால் பெற்ற -
(வாகுகனாகிய நளன் தான்) பெரிய தவத்தால்
பெற்றெடுத்த, இளஅரசை நோக்கி - (தன் மகனாகிய
இந்திரசேனனென்னும்) இளவரசனைப் பார்த்து,
செங்கை வள அரசே - சிவந்த கைவளமுடைய இளவேந்தே!,
உங்கள் அரசு ஒருவன் ஆள - உங்களது உரிமையாகிய
அரசாட்சியைக் கைப்பற்றிக்கொண்டு வேறொருவன்
ஆண்டுகொண்டிருக்க, நீர் ஓடிப்போந்து - நீங்கள்
(அவனுக்கு அஞ்சி) ஓடிவந்து, இங்கண் உறைதல் இழுக்கு
அன்றோ என்று எடுத்து உரைத்தான் - (உன் தாய்
பிறந்த இடமாகிய) இந்த நகரில் வாழ்ந்திருத்தல்
மானக் குறைவன்றோ என்று விளக்கமாகக் கூறினான்.
(க - து.) வாகுகனான நளன், தன்
புதல்வனாகிய இளவரசனை நோக்கி, ‘வேந்தே !
உங்கள் அரசாட்சியைக் கைப்பற்றிக்கொண்டு
வேறொரு மன்னன் தனக்குரிமையாக ஆள, நீங்கள்
அவனுக்கு அஞ்சி வந்து இங்கே வாழ்தல்
மானக்கேடல்லவா?’ என்று கேட்டான் என்பதாம்.
(வி - ரை.) உங்கள் அரசு: ஆறாம்
வேற்றுமைத்தொகை. ஒருவன் - வேறு ஒருவன்; சிறிதும்
உங்களுக்கு உரிமையில்லாதவன் என்று கூறியபடி.
ஓடிப்போதல் - ஓடிவருதல். இங்கண் - இவ்விடம்.
ஈண்டுக் குண்டினபுரம். இழுக்கு - இழிவு. அன்றோ
என்பதில் ஓகாரம் வினாப்பொருள். செம்கை -
சிவந்த கை. வளம் - கொடை, அல்லது
செல்வமென்றலுமாம். மாதவம் - பெரிய தவம்.
பெரியதவமாவது செயற்கரிய செய்து மகனைப்
பெறவேண்டி முயன்ற கடமை.
1‘மகன்தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்என்னுஞ் சொல்’
என்னும் வள்ளுவர் மறைமொழிக்
கருத்தும் அரும்பெறற் புதல்வரைப் பெறுதற்குப்
பெருந்தவஞ் செய்யவேண்டுமென்பதைச் சுட்டுகின்றது
காண்க. எடுத்தல் - பெருங்குரலெடுத்துப் பேசுதல்.
எடுத்தல், இப்பொருள் தருதலை,
1. திருக்குறள் : 70.
|