|
என்பது, சொல்லின் தொகையுணர்ந்த
நல்லார் கண்ட முடிபு. இம்முறையில் யாரிடம் எவ்வாறு
பேசுவது, எதைக் கூறுவது, எவ்விடத்து எதையுரைப்பது
என்று எண்ணாமல் கூறிய மாற்றத்தைக் கேட்டதும்
தன் தொழிலுக்கேற்பத் தன் சூழ்நிலைக் கேற்பவே
இவன் பேசுகின்றானென்று சினங்கொண்டவனாய் ‘நீ
அல்லால் அஞ்சாரோ’ என்றதோடமையாது ‘அடுமடையா’
என்றான் ; அதனோடும் அவன் சினந்தணியாது ‘சிறுதொழிலாய்’
என்றும் கூறினான். வாய்மை - உண்மை நெறி. அல்லது
மெய்யே உரைத்தல். தன் தந்தையாகிய நளன்
உண்மைநெறி யொன்றே பற்றியொழுகுவோன் ;
அதற்குப் புறம்பான வேறொன்றையும் மதிப்பதில்லை.
தான் உண்மை நெறியை நிலைநாட்டுதற்கே தான்
சூதுப்பணையமாக வைத்தாடிய நாடு நகரத்தையெல்லாம்
புட்கரனுக்கே விட்டுவிட்டு வந்தான் ; உண்மை தவறி
நடப்பதாக இருந்தால் அவனைப் போர்செய்து வென்று
நாட்டைக் கைப்பற்றியிருக்கலாம். அது தகாதென்றே
கருதி விட்டுவிட்டு வந்தது இழுக்கா? இதனைத் துணிந்து
கூறுவோர் உன்போன்ற சிறுதொழிலும் சிற்றினப்
பழக்கமும் கொண்டவர்க்கே தகுமென்றும்,
பெருந்தன்மைமிக்க அரசர்களும் துணிந்து கூறுதற்கு
ஒருப்படார் என்றும் வாகுகனுக்கு இடித்துரைத்தான்,
அரசிளங்குமரன் ; தன் தந்தையைப்பற்றி இழித்துக்
கூறிய வெஞ்சொல் தாங்காத உள்ளத்தவனாய் என்க.
இது உண்மையன்புள்ளாரிடத்து இயற்கையாக எழும்
உள்ளக் கசிவு.
சமயகுரவர்களுள் ஒருவராகிய
திருநாவுக்கரசு நாயனாரிடத்து அளவிறந்த
அன்புகொண்டவர் அப்பூதி நாயனார்.
திருநாவுக்கரசர் வேளாண் குலத்தினர் ;
அப்பூதியடிகள் அந்தணர் மரபினர் ; அன்பிற்கு
அடைக்கும் தாழ் ஏது ? அது சாதி சமயம் முதலிய
கட்டுக்களைக் கடந்ததன்றோ ? அவ்வன்பினால்
நாவரசரைத் தம் ஆசிரியராக, அருட்குரவராகக்
கொண்டார். முன்பின் இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு
உரையாடியதில்லை. நாவுக்கரசர் செய்துபோதரும்
சைவநன்னெறிமுறைகளைக் கேள்வியுற்றே அவர்பால்
அன்புகொண்டார். அதனால் அவர் தாம்
செய்துபோதரும் தண்ணீர்ப்பந்தர் முதலிய
அறவிடுதிகட்கும் தம்புதல்வர்கட்கும்
பிறவற்றுக்கெல்லாம் தம் அருட்குரவராகிய
நாவரையர் பெயரையே இட்டு வழங்குவதானார். இஃது
இவ்வாறு நிகழ, அடிகளார் ஒருகால் இறைகோயில்கள்
தோறுஞ் சென்று வழிபாடு செய்துவந்தார் ; வருங்கால்
வழியில் ஓர் தண்ணீர்ப் பந்தல், அதில் தம்
பெயர் பொறித்திருந்ததைக் கண்டார்;
வியந்தார்; உசாவி அறிந்து அப்பூதியடிகள் ஊராகிய
திங்களூருக்குச் சென்றார் ; கண்டார்; அவர் இவரை
யாரோ துறவுக்கோலம் பூண்ட ஓர் பெரியாரென்று
வணக்கங்கூறி இருக்கை கொடுத்து
|