பக்கம் எண் :

மூலமும் உரையும்503

(இ - ள்.) (வாகுகனே ! இன்னும் எந்தை பெருமையைக் கேள்) பணிமுடியில் பார்காக்கும் பார்வேந்தர் தங்கள்-ஆதிசேடனென்னும் பாம்பால் சுமக்கப்படுகின்ற உலகமன்னர் யாவரும், கந்து சுளியும் கடாகளிற்றின் வந்து - கட்டுத்தறியை முறிக்கின்ற இயற்கையையுடைய வலிமை பொருந்திய ஆண் யானையின்மீது ஏறிவந்து, தாழும் மணிமுடியில் தேய்ந்த வடு - வணங்குதலால் மணியழுத்திய முடிகள்பட்டு அழுத்தி உண்டான சுவட்டுத் தழும்பினை, எந்தை இணைகழலின் எம்மருங்கும் காணல் ஆம் - எந்தந்தையாகிய நளமன்னன் திருவடிகள் இரண்டிலும் எல்லாப் பக்கங்களிலும் அடையாளமாகப் பார்க்கலாம். (எந்தை, அரசர்கள் வணங்கும் ஆண்டகை என்றபடி.)

(க - து.) ‘வாகுகனே! இன்னுங்கேள் பேரரசர்கள் யாவரும் யானைமீதேறிவந்து தம் மணிமுடிகள் அழுத்த வணங்குதலால், அம்முடிகள் பட்ட தழும்புகளை எம் தந்தை நளமன்னன் திருவடிகளில் எல்லாப் பக்கத்திலும் காணலாம்’ என்றான், இந்திரசேனன் என்பதாம்.

(வி - ரை.) எம்+தந்தை : எந்தை, மரூஉமொழி. கழல்: ஆகுபெயராகக் கால்களுக்கு ஆயிற்று. இணை - இரண்டு. எ+மருங்கு - எந்தப்பக்கமும். இணைத்தென்றறிந்த வினையாகலான் உம்மை முற்றாக வந்தது. கந்து - யானைகட்டும் தூண். சுளிதல் - சினத்தல் என்றலுமாம். கடாக்களிறு : ஒரு பொருட் பன்மொழி. வேற்று நாட்டு வேந்தர்கள் நளமன்னனைக் கண்டு அவன் தயை பெறற் பொருட்டும், சினத்தை மாற்றி அருள்பெறற்பொருட்டும், திறை கொணர்ந்து செலுத்துதற் பொருட்டும் வருங்காலைத் தம் மணிமுடிகள் நளமன்னன் கால்களில் பதிந்து தழும்பேற வணங்குவராதலின், அதனைப் புதல்வன் கூறித் தன் தந்தையேற்றங் கூறினான்.

இவ்வாறு முத்தொள்ளாயிரத்தும் சோழமன்னனுக்குத் திறையளக்கும் பொருட்டு வேந்தர்கள் வந்து நெருங்கிக் காத்துக் கொண்டிருந்தகாலை, அங்கிருந்த வாயில் காப்போன் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் இப்போது செல்லவேண்டா ; பல அரசர்கள் வணங்குதலால் அவர்கள் முடிகள் தாக்கி எம் வேந்தன் கால்கள் புண்ணாக இருக்கின்றன. அதனால் போய்ப் பார்ப்பதற்கு இதுகாலை ஏற்றதாக இல்லை, எனவே செல்லன் மின்’ என்று தடுத்து நிறுத்தியதாகக் கூறும் கருத்தோடொப்பவே நளனை வணங்கியதால் அவன் கால்களில் தழும்பேறியதைக் கூறினார். அப்பாட்டு.