பக்கம் எண் :

506நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

(க - து.) தமயந்தியனுப்பிய தோழியர், தமயந்திபாற் சென்று கண்டு, வாகுகன் தன் மக்களைப் பார்த்துப் பேசிய உரைகளை முற்றும் விடாமல் எடுத்துரைத்தார்கள்; அதைக் கூறுதற்குள் தமயந்தி மனமுடைந்து கீழ்விழுந்தழுவாளாயினாள் என்பதாம்.

(வி - ரை.) கொற்றம் - வெற்றி. அரசகுமரனாதலால் மெய்யிலக்கணம் வெற்றிக்குரிய பண்புடன் இலகுவதென்பார் ‘கொற்றக்குமரன்’ என்றார்.

1‘அன்னையவள் மெய்க்குறிகள்
அனைத்தையும்பார்த் துனக்கோர்
ஆண்பிள்ளை உண்டு’

என, மெய்யிலக்கணம் கண்டுணர்வதாகப் பிறரும் கூறுதல் காண்க.

கோதை - கூந்தல். ஆகுபெயராகத் தமயந்தி புதல்வியை உணர்த்திற்று. மற்று, தான் இரண்டும் அசைச் சொற்கள். பாநயம் குறித்து வந்தன. வாசகம் - பேச்சு. குழந்தைகளோடு வாகுகன் பேசிய உரையாடல். முற்றும் என்பதில் உம்மை முற்றும்மை. இனைத்தென்றறிந்த பொருளில் வந்தது. அழிந்தான் : முற்றெச்சம். தமயந்திக்குத் தோழிமார்கள் வந்து நிகழ்ந்ததைக் கூறியவுடன் தன் கணவனாகவே இருத்தல் கூடுமெனத் தெளிவும் ஒருபால் ஐயமும் நிகழ்ந்த இடுக்கண்களை எண்ணியவுடன் வருத்தமும் மிக்கெழ, உணாவிழந்து உள்ளம் உடைந்து கீழ்விழுந்தழுததை ‘மொழியாத முன்னே.........அழுது’ என்றார். (64)

தமயந்தி, நளன் உருமாறிய நிலைக்கு இரங்கிக் கூறல்

398. கொங்கை அளைந்து குழல்திருத்திக் கோலஞ்செய்
அங்கை இரண்டும் அடுபுகைமயால் - இங்ஙன்
கருகியவோ என்றழுதாள் காதலனை முன்னாள்
பருகியவேல் கண்ணாள் பதைத்து.

(இ - ள்.) காதலனை முன்னாள் பருகிய வேல் கண்ணாள் - பிரிவதற்கு முந்தின காலத்தில் தன் காதற்கணவனாகிய நளனின் அழகைக் கண்டு நுகர்ந்த வேல்போன்ற கண்களையுடைய தமயந்தியானவள், கொங்கை அளைந்து குழல்திருத்தி கோலம்

1. மீனாட்சியம்மை குறம் : 23.