|
தமயந்தி, தன் தந்தையிடம் கூறதல்
399. மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவற்குக்
கொற்றத் தனித்தேரும் கொண்டணைந்து - மற்றும்
மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்காண் எங்கள்
கொடைத்தொழிலான் என்றாள் குறித்து.
(இ - ள்.) (தமயந்தி தன் தந்தையை
நோக்கி) இத்திரு நகர்க்கு வந்து அடைந்த
மன்னவற்கு - இந்தச் சிறந்த நகரத்துக்கு வந்து
சேர்ந்த இருதுபன்ன மன்னவனுக்கு, கொற்ற தனிதேரும்
கொண்டு அணைந்து - வெற்றி பொருந்திய ஒப்பற்ற
தேரையும் செலுத்திக்கொண்டுவந்து, மற்றும்
மடைத்தொழில் செய்கின்ற மன்னவன் - (அதற்கு)
மேலும் சமையல் தொழிலும் செய்கின்ற வேந்தனே,
எங்கள் கொடைத்தொழிலான் என்றாள் குறித்து -
ஈகையிற் சிறந்தவனாகிய எங்கள் நளமன்னனாவான்
என்று உறுதிப்படுத்திக் கூறினாள் தமயந்தி.
(க - து.) தமயந்தி
தந்தையைப்பார்த்து, ‘இங்கு வந்திருக்கின்ற
இருதுபன்னனுக்கு தேரோட்டியாகவும் சமையல் தொழில்
பார்ப்பவனாகவும் இருக்கின்றவனே, எங்கள்
நளமன்னன் ஆவன்’ என்று உறுதியுடன் கூறினாள்
என்பதாம்.
(வி - ரை.) மற்று இரண்டில் முன்னது
அசைநிலை, பின்னது வினைமாற்று. திருநகர் - அழகிய
நகர், அல்லது திருமகள் உறைகின்ற கலைமகள்
உறைகின்ற நகரென்றலுமாம். கல்வியும் செல்வமும்
சிறந்த நகராக இருத்தலான். தனி - ஒப்பின்மை
கொடைத்தொழில் - ஈகைக்குணத்தின் மேம்ாாடு. தன்
தந்தைக்குத் தன் கணவனே, இருதுபன்னன்
தேரோட்டியாகவும் சமையல் தொழில் புரிபவனாகவும்
வந்திருப்பவனென்று கூறினாளெனக்கொள்க. (66)
வீமமன்னன், வாகுகனிடம் செல்லல்
400. போதலரும் கண்ணியான் போர்வேந்தர் சூழப்போய்க்
காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் - ஓதம்
வரிவளைகண் டேறும் வளநாடன் தன்னைத்
தெரிவரிதா நின்றான் திகைத்து.
|