பக்கம் எண் :

மூலமும் உரையும்509

(இ - ள்.) போது அலரும் கண்ணியான் - பூவரும்புகள் மலர்கின்ற மாலையையுடையவனாகிய வீமமன்னன், போர்வேந்தர் சூழபாய் - போர்த்தொழிலில் வல்ல வேந்தர்களெல்லாம் தன்னைப் பின் தொடர்ந்து வரச்சென்று, காதலி தன் காதலனை கண் உற்றான் - தன் மகளாகிய தமயந்தியின் கணவனைக் கண்டான், (பார்த்தவன்) ஓதம் வரிவளைகொண்டு ஏறும் வளநாடனை - கடல் தன் அலைகளினால் கீற்றுகள் உள்ள சங்கினங்களை வாரிக் கொண்டு கரைகளின் மேலேறிச் செல்கின்ற நீர் வளப்பமுள்ள நிடதநாட்டுக்கு வேந்தனான நளனை, தெரிவு அரிது ஆக திகைத்து நின்றான் - அடையாளம் அறிந்துகொள்ள இயலாமல் மயங்கி நின்றான்.

(க - து.) தமயந்தி கூறியதைக்கேட்ட வீமமன்னன், அரசர்கள் சூழ நளமன்னனைப் பார்க்கச்சென்றான்; சென்று அவன் அடையாளம் தெரியாது மயங்கி நின்றான் என்பதாம்.

(வி - ரை.) போது - பொழுது என்பதன் விகாரம். குறித்த காலத்தில் தவறாது மலர்தலால் கால இடவாகு பெயராய் மலருக்காயிற்று. கண்ணி - விட்டுவிட்டுக் கட்டப்பட்ட மலர்ச்சரம். போர்வேந்தர் : அரசர்க்குரிய இயற்கையடை. ‘இகலரசர்’ என்பதுபோல. காதலி தன் கதலன் என்பதற்கு காதலிக்குரிய காதலன் எனக்கொள்ளினுமாம். ஒதம் - ஓசையையுடைமையால் கடலுக்கு ஆகிப்பின் அலையைக் குறித்தலால் இருமடி ஆகுபெயர். வரிவளை - வரிகளையுடைய சங்குகள்: இரண்டனுருபும் பயனும் தொக்கதொகை. தெரிவு அரிது ஆக - தெரிவரிதா என ஈற்றுயிர் மெய்க்ககரம் குறைந்தது; விகாரம். திகைத்தல் - ஒன்றுந்தோன்றாமல் நிற்றல். யாரும் தாம் குறித்த பொருளை மனத்துட்கொண்டு செல்வது இயற்கை. சென்றால் தாம் கருதியதற்கு மாறாக இருப்பின் தம் மனம் அதனால் கலக்கமுற்று ஒன்றுந்தோன்றாமல் நிற்பர். இஃது உலகியல்பு. இவ்வியற்கைக்கு ஒப்பவே, வீமன் தன் மகள் கூறியதைக்கேட்டு விரைந்து நளனைப்பார்க்கச் சென்றான். சென்று கண்டகாலை, குறுகிய வடிவம், கருநிறம், இந்நிலையில் வாகுகன் தோற்றமளித்தான். இவனா நம் மருகன் ? அவற்கும் இவற்கும் ஒன்றும் ஒற்றுமையில்லையே; நம் மகள் அறியாது கூறினாள் என்ற எண்ணமிட்டவனாய்ப் பேசாது நின்றான். இக்காட்சிப்படத்தை ஆசிரியர் ‘தெரிவரிதா நின்றான் திகைத்து’ என்றார். தெரிவு-தெரிதல், அறிதல். திகைத்தலாவது, தான் எண்ணியது வேறு, நடந்தது வேறாகக் கண்டதும் உண்டாகும் மனக்கலக்கம். (67)