பக்கம் எண் :

மூலமும் உரையும்511

னாய் நன்கு ஆராய்ந்து இவன் நளனேயென வீமமன்னன் முடிபு செய்தான். ‘இதனைத் தெளிந்தான்..........மதித்து’ என்றார். நோக்குதல் - ஆராய்தல் என்னும் பொருண்மையில் வந்தது. கம்பர் காவியத்தில் அயோத்தி ஏந்தலும் இலக்குவனும் மிதிலைச் செல்வியைத் தேடிக் கானில் நெடுகச் சென்றபோது அனுமான் வேறொரு உருவில் தோன்றுகின்றான் ; இவ்விருவர்களையும் சிறந்த நற்பண்பினர் எனக்கருதிச் சில மொழிகள் கழறுகின்றான்; அதைக்கேட்டு ஆய்ந்த இராமன், ‘இவன் உருவோ வேறு; இவன் சொற்கள் உயர்ந்த பண்புடையன; கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் இருக்கின்றன ; இவன் யாரோ ?’எனக்கருதினானாய்த் தன் இளவலை நோக்கி வினவிய காலை,

1‘இல்லாத உலகத் தெங்கும் ஈங்கிவன்
இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே
என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே யார்கொல்இச்
சொல்லின் செல்வன்
வில்லார்தோள் இளைய வீர விரிஞ்சனோ
விடைவல்லானோ ?’

என்பதில் சொல்லின் செல்வனாகிய இவன், நான்முகனோ முக்கண் முதல்வனோ என்று பாராட்டினான். இங்கு உருவம் மாறுபட்டும் சொற்செயல்கள் உயர்ந்திருந்ததைக்கொண்டு இவ்வுருவத்துக்கேற்ற பண்பன்று; உயர்ந்த பண்பு இவன்கண் உள்ளது என்று அனுமானை உயர்ந்தவனாக எண்ணியதுபோன்றே வீமமன்னனும் நளனெனவே கருதி முடிவுசெய்தான் என்க. 2‘உருவுகண்டெள்ளாமை வேண்டும்’ என்பது திருவள்ளுவர் காட்டும் செம்மொழி. நுணங்கு - நுட்பம். 3‘நுணங்கிய கேள்வியர்’ என்ற வள்ளுவர் வாய்மையினும் இஃது இப்பொருட்டாதல் காண்க. வாக்கு . வாய்ச்சொல். மதித்தல் - மேலாகக் கொள்ளல். தன்: அசைநிலை.

வீமன், வாகுகனிடம் வேண்டிக் கேட்டல்

402. பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று - மந்தி
தெளியா திருக்கும் திருநாடா உன்னை
ஒளியாது காட்டுன் உரு.

1. கம்பராமா, மராமரப்: 20, 2, 3. திருக்குறள்: 667; 419.