பக்கம் எண் :

512நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

(இ - ள்.) (பின்னும் வீமன் வாகுகனை நளனெனவே தெளிந்து) மந்தி பூகத்தின் ஐ தலையின் பாளைதனை - பெண் குரங்கானது கமுகமரத்தின் அழகிய மேலிடத்திலுள்ள பாளையை, பை தலைய நாக பணம் என்று ஐ உற்று - நஞ்சுப் பையைத் தன்னிடத்து உடைய நாகப்பாம்பின் படமென ஐயங்கொண்டு, தெளியாது இருக்கும் திருநாடா - மனத்துணிவில்லாமல் (அச்சமுற்று) இருக்கின்ற அழகிய வளப்பமிக்க நிடதநாட்டுக்குரிய நளவேந்தே, உன்னை ஒளியாது உன் உருகாட்டு - உன்னை இன்னும் மறைக்காமல் உன் உண்மை வடிவத்தை எங்கட்குத் தெரிய வெளிப்படுத்திக் காட்டுவாயாக (என்றான்).

(க - து.) ‘நிடதநாட்டு வேந்தே ! நாங்கள் உன் உருவத்தைத் தெளியாமல் இருக்கின்றோம்; நீ இன்னும் உன்வடித்தை ஒளிக்காமல், உன் உண்மை வடிவத்தை காட்டுவாயாக’ என்றான். வீமன் என்பதாம்.

(வி - ரை.) பை - நஞ்சுப்பை. பாம்பின் வாயிடத்தே பற்களுக்கு அடியில் அமைந்திருப்பது; பணம் - படம்: மெலித்தல் விகாரம்; நாகப்பாம்பின் படம் நிடதநாடு நீர்வளனும் நிலவளனும் மிக்கது. அங்குள்ள சோலைகளில் செழித்துக் கொழுத்து வளர்ந்திருக்கும் கமுகுகள் குலைகள் தள்ளுகின்றன. அச்சோலைகளில் வாழும் பெண் குரங்குகள் அதன்
வடிவு நாகப்பாம்பின் படம்போன்று விரிந்து வளைவுற்று இருத்தலால் அதனை நாகப்பாம்புகள் என்று கருதுகின்றன ; ஐயுறுகின்றன ; தெளியாமல் இருக்கின்றன ; அதனால் அஞ்சுகின்றன ‘இவ்வளவு இயற்கை வளமுடைய நாட்டுக்குரிய வேந்தே உன் உருவை நாங்கள் தெரிதற்கு உன் உண்மைவடிவை ஒளிக்காமல் காட்டு’ என்றான். இங்கே நாட்டுவளங் கூறியதற்கேற்ப உள்ளுறை உவமமாகக் குரங்குகள் பாக்குடப பாளைகளைப் பாம்பென்று கருதி அஞ்சுவது போல, ‘உன் உண்மை உருவைத் தெரியாமல் வாகுகனென்று கருதி வெளித்தோற்றத்தால் மயங்கி அஞ்சுகின்றோம்’ என, விரித்துப் பொருளுக்கியைய அமைத்துக்கொள்க. மந்தி - பெண் குரங்கு ஆதலால், தமயந்தி மயங்குகின்றாளென்ற குறிப்புங்கொள்க தமயந்தியென்றே உய்த்துணர்தற்கு ஆசிரியர், பொதுவாகக் குரங்கென்று கூறாது, ‘மந்தி’ தெளியா திருக்கும். திருநாடா’ என்றார்.

இவ்வாறே, அகநானூற்றினும் ‘விலங்குகளும் குறியாத இன்பங்கொள்கின்ற மலைநாடனே !’ எனத்தலைவனைத் தோழி விளிக்குமுகத்தான், தலைவன் பேரின்பத்துக்குரியன் என உள்ளுறை கொள்ள வைத்ததுபோற் கொள்க.