|
ஆடைகள் இரண்டில் ஒன்றை அரையில்
எடுத்துடுத்தினான் ; மற்றொன்றை மேலாடையாகப்
போர்த்தினான் என்பதாம்.
(வி - ரை.) அம்-அழகு. பூ - பொலிவு.
பொலிந்து தோற்றமளிப்பது தன் மென்மைத்
தன்மையினாலாகலான் மென்மையென்று பொருள்
கூறப்பட்டது. துகில் - மெல்லிய ஆடையென்பதற்கு,
1‘வட்டும் வழுதுணையும் போல்வாரும்
வாழ்வரே
பட்டும் துகிலும் உடுத்து’
என்று பிறர் துகில் என்று கூறுமாற்றால்
தெளிக. உடுத்தான் - உடுத்து என முற்றெச்சமாகக்
கோடலுமாம். பொருதல் - போர் செய்தல்.
போருக்குக் காரணமான பகையைப் போரென்றது
காரியவாகு பெயர். நளனுக்கும் புட்கரனுக்கும்
நட்பேயன்றிப் பகைமையில்லை. கலியின்
வஞ்சத்தால் பகைமை உண்டாக்கிச் சூதாடச்
செய்வித்தானாகலான் ‘பொருகலியின்’ என்றார்.
கோ - அரசு. தாயம் - உரிமை. தன் வழிவழியாக வாழையடி
வாழை போல் தவறாமல் உரிமையாகக் கிடைத்த
அரசாட்சி. அதனைச் சூதாடித் தோற்க நேர்ந்ததை ‘இழந்த
கோ’ என்றார். (70)
வாகுகன் உரு நீங்கி, நளன் உருவாகத்
தோன்றல்
404. மிக்கோன் உலகளந்த மெய்யடியே சார்வாகப்
புக்கோர் அருவினைபோல் போயிற்றே - அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும்
மானகத்தேர்ப் பாகன் வடிவு.
(இ - ள்.) (இவ்வாறு நளன்
அவ்வாடைகளை அணிந்தவுடன்) அக்காலம் - அந்தக்
காலத்தில், காதலியை கானகத்தே நீத்து - தன்
காதலியாகிய தமயந்தியைக் காட்டிடத்தே விட்டுப்
பிரிந்து, கரந்து உறையும் மான் அக தேர்ப்பாகன்
வடிவு - மறைந்து வாழ்கின்ற குதிரை பூட்டிய
தேர்ப்பாகனாகிய வாகுகன் உருவமானது, மிக்கோன் -
தேவர்களுட் சிறந்தவனாகிய திருமாலின், உலகு
அளந்த மெய் அடியே சார்வு
ஆக - உலகம் முழுதையும் (குறளுருவெடுத்து மூவடி யளவினதாக)
அளந்த உண்மைத் திருவடிகளே பற்றுக்கோடாகக்
கொண்டு, புக்கோர் அருவினைபோல் போயிற்றே -
(விடாதுபற்றிச்) சார்ந்த அடியார்களின் தீராத
1. நாலடியார் : 264.
|