பக்கம் எண் :

516நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

குரிமை பெற்றதாதலால், அச்சிறப்புக் குறிக்க ‘மானகத் தேர்’ எனக் கூறப்பட்டது. பிறரெல்லாம் மால்+நகம்+தேர் - மானகத் தேரெனக் கொண்டு பெரிய மலைபோன்ற தேர் என உரைத்தார். அப்பொருள் தேரின் பெருமையையும் உயரத்தையும் குறிப்பதன்றிச் சிறந்த பொருளின்று. பெரிய உருவத்தால் சிறப்பில்லை. குதிரைகளின் மனநிலை வேகம் முதலியன தேர்ந்தறிந்து ஓட்டுவதுதான் சிறப்பு. இச்சிறப்பை நளன் தேரோட்டிச் சென்ற காலை, இருதுபன்னன் வியந்ததாக நைடத நூலாசிரியர் உரைக்கும் உரை இதையே மிக்க சிறப்புடையதாகக் குறிக்கின்றது.

1‘கூந்தல் மாவுளம் அறிதலின் சாலிகோத் திரனோ
ஆய்ந்த கேள்வியின் மாதலியோ அன்றி நளனாம்
கூந்தல் வேற்றுரு எடுத்தன னோஎன எண்ணி
வேந்தா வேந்தனும் மணிமுடி துளக்கினன் வியந்தான்’

என்பதால் உணர்க. பாகன்-பகுதியறிவோன் என்னும் பொருட்டாய் ஈண்டுத் தேர்ச்சாரதிக்கு ஆயிற்று. (71)

நளன் புதல்வர்கள், தந்தையைக் காண்டல்

405. தாதையைமுன் காண்டலுமே தாமரைக்கண் நீரரும்பப்
போதலரும் குஞ்சியான் புக்கணைந்து - கோதிலாப்
பொன்னடியைக் கண்ணிற் புனலாற் கழுவினான்
மின்னிடையா ளோடும் விழுந்து.

(இ - ள்.) போது அலரும் குஞ்சியான் - நாளரும்புகள் மலர்கின்ற மயிர்முடிப்பையுடைய இந்திரசேனன், தாதையை முன் காண்டலும் - தன் தந்தையாகிய நளனைக் கண்டவுடனே, தாமரைக்கண் நீர் அரும்ப - (அன்பினால்) தாமரை மலர்போன்ற தன் கண்களிலிருந்து நீர் பெருக, மின் இடையாளோடும் - மின்னற்கொடி போன்ற இடையையுடைய தன் தங்கை இந்திரசேனையுடனும், புக்கு அணைந்து - சென்று தன் தந்தையைக் கட்டித் தழுவி, விழுந்து - கீழ்விழுந்து வணங்கி, கோதிலா பொன்அடியை கண்ணின் புனலால் கழுவினான் - குற்றமற்ற அழகிய திருவடிகளைத் தன் கண்ணீரால் அலம்பினான்.

(க - து.) இந்திரசேனன் தன் தந்தையைக் கண்டவுடன், தன் தங்கை இந்திரசேனையுடன் சென்று கட்டித்

1. நைடதம், கலிநீங்கு : 10.