|
தழுவிக் கீழ்விழுந்து தன் கண்ணீர்
அவன் அடிகளை நனைக்குப்படி அழுதரற்றினான்
என்பதாம்.
(வி - ரை.) தாதை - தந்தை. முன் -
நேரில். தாமரைக் கண் : உவமைத் தொகை. குஞ்சி -
ஆண்பாலாரின் தலைமயிர்.
1‘குஞ்சி ஆண்மயிர் புட்பார்ப்புக்
குன்றியின் கொடிமுப் பேரே’
என்னும் சூடாமணி நிகண்டானும்,
2‘குஞ்சி அழகும் கொடுத்தானைக்
கோட்டழகும்’
என்னும் நாலடியாரானும் ‘குஞ்சி’
இப்பொருள் தருதலை அறிக. மின் இடையாள் -
மின்போன்ற இடையாள் என்பது, மகளிரின்
பொதுப்பெயராயினும் உடனிகழ்ச்சிப் பொருளாக ஓடு
என்னும் மூன்றனுருபும் எச்சவும்மையும்
கொடுத்துரைத்தலால் சிறப்பாக இந்திரசேனன்
தங்கையைக் குறித்தது. மிகைப்பட்டு அழுங்காலைக்
கண்களினின்றும் வழிந்த நீர் பெருகி நளன்
கால்களை நனைத்ததை இலக்கணை வழக்காகக் ‘கண்ணிற்
புனலாற் கழுவினான்’ என்றார். (72)
தமயந்தி, நளன் காலடியில்
வீழ்ந்தழுதல்
406. பாதித் துகிலோடு பாய்ந்திழியும் கண்ணீரும்
சீதக் களபதனம் சேர்மாசும் - போத
மலர்ந்ததார் வேந்தன் மலரடியில் வீழ்ந்தாள்
அலர்ந்ததே கண்ணீர் அவற்கு.
(இ - ள்.) (தமயந்தி தன் கணவனைக்
கண்டதும்) பாதி துகிலோடு பாய்ந்து இழியும் கண்
நீரும் - (நளன் அறுத்துவிட்டுச் சென்றதான கிழிந்த)
அரை ஆடை உடுத்த கோலத்துடன் கீழே
பாய்ந்தோடுகின்ற கண்களின் நீரும், சீதகளபதனம்
சேர்மாசும் - குளிர்ச்சி பொருந்திய கலவைச்
சாந்தணிகின்ற கொங்கைகளில் படிந்துள்ள
அழுக்கும், போத - (தன் உடலில்) பொருந்த,
மலர்ந்ததார் வேந்தன் மலர் அடியில் வீழ்ந்தாள்
- அரும்பு விரிந்த பூமாலை யணிந்த நளமன்னனின்
தாமரை மலர்போன்ற திருவடிகளில் வீழ்ந்து
வணங்கினாள், அவற்கு கண்நீர் அலர்ந்தது -
அந்நளமன்னனுக்கும் (இதைக்கண்டவுடன்)
கண்களிலிருந்து தாரை தாரையாக நீர்
பெருக்கெடுத்தோடிற்று.
1. சூடாமணி நிகண்டு : 2. நாலடியார் : 131.
|