பக்கம் எண் :

518நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

(க - து.) தமயந்தி தன் கணவனைக் கண்டதும் அவன் காலடிகளில் வீழ்ந்தாள்; அதைக்கண்டதும் நளனுக்கும் கண்ணீர் பெருக்கெடுத்தோடிற்று என்பதாம்.

(வி - ரை.) நளன், வனத்தில் தமயந்தியை விட்டுப்பிரியும் போது இருவருக்கும் ஓராடையாக இருந்ததை இரண்டு துண்டாக்கிக்கொண்டு வெளியேறினா னாகலான், அதனை முதலில் வைத்துப் ‘பாதித் துகிலோடும்’ என்றார். தன் கணவனைக் கண்டதும் அன்பு மேலீட்டினாலும், துயர மிகுதியாலும் தன்னையறியாது கண்கள் நீரைச் சொரிந்துகொண்டிருந்ததால் ‘பாய்ந்திழியும் கண்ணீரும்’ என்றார். நளனைப் பிரிந்தது முதல்,
நன்கு உண்ணாதும் உடுக்காதும் நீராடாதும் ஒப்பனைகொள்ளாதும் இருந்துவந்தாளாதலான், மார்பிடமெல்லாம் அழுக்குப்படிந்துளது. அதனால் ‘தனம் சேர் மாசும்’ என்றார். தமயந்தி வந்த போது அவள் தோற்றம் அரை ஆடை, இடையறாத கண்ணீர், நீராடாத மேனி இவைகளே பார்ப்பவர்க்குப் புலனாயின. இவைகளை உடனிகழ்ச்சியாக வைத்துக்கூறினார். இவ்வாறே கண்ணகியாரின் கண்கொள்ளா அவலக்காட்சியைப் படம் பிடித்தது போல் ஆசிரியர் இளங்கோவடிகளார் சித்திரித்துள்ள காட்சி போலவென்க.
என்னை ?

1‘மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும்’

என்றதூஉம் காண்க. ‘பிரிந்தவர் கூடினாற் பேசவேண்டுமா’ என்பதற்கேற்ப நளனும் தமயந்தியும் ஒருவரை ஒருவர் நேரிற் கண்டகாலை நெருப்பிலிடு வெண்ணெயென நெஞ்சுருகி நின்றாராதலால் இருவர் தன்மைகளையும் ஒன்றாக்கி, ‘கண்ணீரும்......கண்ணீரவற்கு’ என்று கூறினார். (73)

இதுவும் அது

407. வெவ்விடத்தோ டொக்கும் விழியிரண்டும் வீழ்துயில்கொள்
அவ்விடத்தே நீத்த அவரென்றே - இவ்விடத்தே
வாரார் முலையாளம் மன்னவனைக் காணாமல்
நீரால் மறைத்தனவே நின்று.

(இ - ள்.) வெவ்விடத்தோடு ஒக்கும் விழி இரண்டும் - கொடுமையுடைய நஞ்சை ஒத்திருக்கின்ற கண்கள் இரண்டும்,

1. சிலப், 20: இறுதி வெண்பா - 3.