பக்கம் எண் :

மூலமும் உரையும்519

வீழ் துயில்கொள் அவ்விடத்தே நீத்த அவர் என்று - சோர்ந்த தூக்கத்தின்போது அந்தக் காட்டினிடத்தே விட்டுப் பிரிந்தவரென்று (பார்க்க நாணுவதுபோல்), இவ்விடத்தே - இங்கு வீமமன்னன் அரண்மனையில், வார்ஆர் முலையாள் அம்மன்னவனைக் காணாமல் - கச்சார்ந்த மார்பினையுடையவளாகிய தமயந்தி அந்த நளமன்னனை (நன்கு) காண்டற்கியலாவண்ணம், நீரால் மறைத்தனவே நின்று - தம் நீரினால் இடையே தம் ஒளியை மறைத்து விட்டன. (தமயந்தி கண்களில் நீர் பெருக்கெடுக்கலாயிற்று என்றபடி.)

(க - து.) ஆழ்ந்த தூக்கத்தில் விட்டுப்பிரிந்தவரே இவரென்று தமயந்தியின் கண்கள் இரண்டும் பார்க்க நாணுவதுபோல், தம் நீரினால் நளனுருவைக் காணாதவாறு ஒளியை மறைத்துவிட்டன என்பதாம்.

(வி - ரை.) வெம்மை+விடம் - வெவ்விடம் எனப் புணர்ந்தது. ஓடு ஈண்டு இரண்டனுருபாகிய ஒப்புப்பொருளில் வருதலால் வேற்றுமைமயக்கம். வீழ்தல் - விரும்புதல். தங்குதல் என்னும் பொருளது. உறக்கத்துக்குத் தங்குதலாவது மிகவும் தூங்குதல் ; உணர்வு தெளியாத நிலை. அவ்விடம் பண்டறி சுட்டாய்க் காட்டை உணர்த்திற்று. அவர் : பிரிந்தவன், இரக்கமில்லாதவன் எனச் செறற் பொருளாக வந்த உயர்வு குறிக்கும் பன்மை. ‘கசையடி பெறுவீர் காளையீரே !’ என்பதுபோல சிறப்பால் மகிழ்ச்சியால் உயர்வு குறிப்பதும் உண்டு.

1‘செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோர் இன்னுரைதான்
தந்தாரே தந்தார்’

எனச் சிந்தாமணியினும் கிளியை உயர்வு கொடுத்துப் பேசியதாக வருதல் காண்க. வார் - கச்சு, இதுகாலை வழக்கில் இரவிக்கையென வழங்குவர். தமயந்தி நளனைக் கண்டதும் ‘மலரடியில் வீழ்ந்தாள்’ என்றார். வருத்தம் மிகுதியினால் நீர் பெருகிக் கண்ணொளி மழுங்கிற்று. அதனைத் தற்குறிப்பேற்ற அணியாகக் கொண்டு காட்டில் விட்டு தன்னந்தனியாக்கிச் சென்ற கல்லினும் வல்லென்று நெஞ்சினாரைப் பார்த்தல் தகாதெனக் கருதித் தமயந்தியின் கண்கள் இரண்டும் ஒன்றுபட்டுத் தம் நீரைக் கொண்டு தம் ஒளியை மறைத்து நளனுருவைத் தமயந்தி காணாவாறு செய்துவிட்டன. என்னே ! கட்புலன்களின் உணர்ச்சியென நகைச்சுவையும் சொன்னயமும் பொருள் நயமும் பொதுள்

1. சீவகசிந்தாமணி, குணமாலை : 186.