தவறாமல் காக்கும் முறையுடையான்
என்பதைக் குடைமேல் ஏற்றிக் கூறினார். ‘ஒடுங்கிடையாள்’
சிறிய இடையினை யுடையாள் -
நல்லிலக்கணம்வாய்ந்த பெண்களுக்கு நெற்றியும்
அடியும் இடையும் சிறுத்திருப்பதே இயற்கையாகலான்,
அவ்விலக்கணம் யாவும் முற்றும் நிரம்பியவள் என்பதை
உணர்த்தியவாறாம்.
1‘அகலல்குல் தோள்கண்ணென
மூவழிப்
பெருகி
நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி’
என்றார் கலித்தொகையினும். (39)
அன்னம் எப்போது திரும்பிவருமென
நளன் எதிர்பார்த்திருத்தல்
47. இவ்வளவிற் செல்லுங்கொல் இவ்வளவிற்
காணுங்கொல்
இவ்வளவிற் காதல் இயம்புங்கொல் - இவ்வளவில்
மீளுங்கொல் என்றுரையா விம்மினான் மும்மதம்நின்
றாளுங்கொல் யானை அரசு.
(இ - ள்.) மும்மதம் நின்று -
மூன்றுவகை மதங்களும் மிகுந்து, ஆளும் கொல் யானை
அரசு - (அதனால்) அவைகளின் வழிப்பட்டு நிற்கும்
கொலைத்தொழில் உடைய யானையையுடைய நளவேந்தன்,
இ அளவில் செல்லுங்கொல் - (அன்னமானது)
இத்தனைநேரம் (குண்டினபுரம்) சென்றிருக்குமோ, இ
அளவில் காணும்கொல் - இத்தனை நேரம்
(தமயந்தியைக்) கண்டிருக்குமோ, இ அளவில் காதல்
இயம்பும்கொல் - இத்தனை நேரத்துக்குள், (எனக்கு
அவள்பாலுள்ள) மெய்யன்பை உரைத்திருக்குமோ, இ
அளவில் மீளும் கொல் - இத்தனைநேரம் (அங்கிருந்து)
திரும்பி வந்துகொண்டிருக்குமோ, என்று
உரையாவிம்மினான் - என்று சொல்லிச் சொல்லிப்
பெருமூச்சுவிட்டு ஏங்கிக்கொண்டிருந்தான்.
(க - து.) நளமன்னனானவன்,
இத்தனைநேரம் குண்டினபுரத்துக்கு அன்னம்
சென்றிருக்குமோ என்பது முதலாகச் சொல்லி
வருந்திக்கொண்டிருந்தான் என்பதாம்.
(வி - ரை.) ‘இவ்வளவிற்
செல்லுங்கொல்’ முதலியன, நளமன்னன் காதல்
மிகுதியால் தவித்து நிற்கும் தன்மையை
1. கலி : 108.
|