|
இந்நிலவுலகத்தில் இனித்தோன்றுவார்
எவர்?, என்பால் வேண்டும் வரம் கேட்டுக்கொள்
என்றான் - (ஆதலால் நீ) என்னிடத்தில் விரும்பிய
வரத்தைக்கேட்டுப் பெற்றுக்கொள்வாயாக வென்று
வேண்டினான்.
(க - து.) கலிவேந்தன் நளன் முன்பு
தோன்றி, ‘அரசே ! உன் மனைவி தமயந்தியின் கற்பு
மேம்பாட்டுக்கும், உன் ஆட்சி ஒழுங்குக்கும்
ஒப்பாக உரைத்தற்கு எவருமே இல்லை ; ஆதலால் உனக்கு
வரங்கொடுக்க விரும்புகிறேன் ; வேண்டிய
வரத்தைக்கேள் ; தருகிறே’னென்று கூறி வேண்டினான்
என்பதாம்.
(வி - ரை.) தேவி இவள் :
இருபெயரொட்டுப் பண்புப் பயர்;
இவள் அண்மைச் சுட்டுப்பெயர். செங்கோல் -
நேர்மையான அரசாட்சி. ‘ஒப்பார் யார் போதுவார்’
என்பது இனி எதிர்காலத்தில் ஒருவரும்
இருக்கப்போவதில்லை என, நளன் ஆட்சிச்சிறப்பை
வியந்தான். கணவன், மனைவியராகிய நீவிர் இருவரும்
உயர்ந்த பண்புடையவர்கள். பெண்பிறவியின்
விழுமிய பண்பு, கற்பு நெறியில் ஒழுகுதல்.
ஆண்பிறவியின் விழுமிய பண்பு, தமவும் பிறவும்
ஒப்பநாடி நடுநிலை பிறழாது வாழ்தல் ; முறைசெய்தல்.
இவ்விருவேறு பிறப்பின் மேன்மையை உங்கள்
இருவர்பாலும் கண்கூடாகக் கண்டேனென்று கலி
புகழ்ந்து கூறி வரங்கொடுக்கக் கருதி, ‘வரங்கேட்டுக்கொள்’ளென்று
வேண்டினான் என்க. தன் அன்பினால் ஆட்சி
புரிகின்றவனேயன்றித் தன் கடுகடுத்த
மொழியினாலும் கை இகந்த தண்டத்தினாலும்
ஆள்கின்றவனில்லை யென்பாராய் ‘முற்றன்பால்
பாரளிப்பான்’ என்றார். இவ்வாறே அன்பானும்
அறத்தானும் பண்டைக்காலத் தமிழ்வேந்தர்கள்
ஆண்டமை ஆவின் கன்றை அறியாது கொன்ற
குற்றத்துக்குத் தன் மகனைத்
தேர்க்காலிற்கிடத்திக் கொன்றும், கதவைத்
தட்டிச்சோரனென ஐயுறச்செய்த குற்றத்துக்காகத்
தன் கை குறைத்துப் பொன்கை கொண்டும் நெறிமுறை
நிலையை உயர்த்திய சோழ பாண்டியர்களின்
வரலாறும் காண்க. இவ்வரலாற்றை வழக்குரை
காதையில் ஆசிரியர் இளங்கோவடிகள்,
1‘வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்றன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின்
மடித்தோன்’
என்றும்,
1. சிலப், 20 : 53 - 5.
|