பக்கம் எண் :

மூலமும் உரையும்523

1‘கை,குறைத்த செங்கோற் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்’

என்றும் அருள்வது காண்க. (76)

நளன், கலியின்பால் வரம் வேண்டுதல்

410. உன்சரிதம் செல்ல உலகாளும் காலத்தும்
மின்சொரியும் வேலாய் மிகவிரும்பி - என்சரிதம்
கேட்டாரை நீயடையேல் என்றால் கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து.

(இ - ள்.) கிளர்மணிபூண் வாள்தானை மன்னன் மதித்து - ஒளிவிடுகின்ற கல்லிழைத்த அணிகளணிந்த வாட்படையைக் கொண்ட சேனைகளையுடைய நளமன்னன் (நன்கு) எண்ணி, மின் சொரியும் வேலாய் - ஒளிவீசுகின்ற வேற்படையேந்திய கலியே, உன் சரிதம் செல்ல உலகு ஆளும் காலத்தும் - உன் ஆளுகையே எங்கும் நடக்கும்படி நீ உலகையெல்லாம் ஆட்சிபுரிகின்ற கலிகாலத்துங்கூட, என் சரிதம் மிகவிரும்பி கேட்டாரை நீ அடையேல் என்றான் - என் வரலாற்றை மிகவும் விருப்பங்கொண்டு கேட்பவர்களை நீ சேராது இருப்பாயாக வென்று வரங்கேட்டான்.

(க - து.) நளன் கலியை நோக்கி, ‘மின் சொரியும் வேலாய்! உன் பெயரால் வழங்கப்போகும் கலியுகத்தினும் என் வரலாற்றை விரும்பிக் கேட்டாரைச் சேர்ந்து வருத்தாதிருக்கும் வரந்தருக’வென்று கேட்டான் என்பதாம்.

(வி - ரை.) உன் என்னும் முன்னிலைச்சொல், கலிக்கு ஆயிற்று, அவனிடமே நளன் பேசுகின்றானாதலின். சரிதம் - ஈண்டு ஆட்சிக்கு ஆகுபெயர். செல்லுதல் - முட்டின்றி நடத்தல். கலி காலமுறை, முறைபிறழ்ந்து நடக்க, எங்கும் தீமையே பல்கியிருக்கும் என்னும் கொள்கையை உட்கொண்டது. கலிகாலத்தில் நல்லார் பொல்லா ரென்பதையறியாது மக்கள் நடப்பர் ; அதனால் அறங்குன்றி எங்கும்
பாவமே தலைவிரித்தாடும். அப்பாவநிலை சூழ்ந்தபோது கலி, மக்களை ஆட்டி அலைத்து வறுமைத் துன்பத்துக்காளாக்குவன். அக்காலத்தினும் என்வரலாற்றை விரும்பிக் கேட்பாரிடத்து நீ சேர்ந்து துன்புறுத்தாதே என்னும் இவ்வரத்தை தன்னலங்கருதாது மக்கள் நலனென்றையே கருதி வேண்டினான். ஆதலால் நளன் உயர்ந்த அருள்முறை இதனால்

1. சிலப், 23 : 51-3.