பக்கம் எண் :

மூலமும் உரையும்525

பொருந்திய வேற்படையையுடைய வேந்தே, என்காலத்து - என் ஆட்சி நடக்கின்ற கலிகாலத்தும், உன்சரிதம் கேட்டாரை யான் அடையேன் - உன் வரலாற்றை (விரும்பிக்) கேட்பவரிடத்தே நான் சார்ந்து துன்புறுத்த மாட்டேன், மெய் என்று - இஃது உண்மையாகச் சொல்கின்றேனென்று, நன் காவி மட்டு இறைக்கும் சோலை வளநாடன் முன்நின்றது - நல்ல குவலைமலர்கள் தேன் சுரந்து பெருக்கெடுத்தோடிச் செல்கின்ற சோலைகள் சூழ்ந்த வளப்பம் பொருந்திய நிடதநாட்டு அரசனாகிய நளனுக்கு முன்பாக நின்று, கட்டு உரைத்துப் போனான் - உறுதிமொழி கூறிச் சென்றான்.

(க - து.) கலியானவன், நளனுக்கு நேராகத் தோன்றி நின்று, ‘நிடதநாட்டுக்கு வேந்தே! என் காலமாகிய கலியுகத்தினும் உன் வரலாற்றைக் கேட்போரிடத்துச் சேர்ந்து துன்புறுத்தேன் ; இஃது உண்மை’ யென்று உறுதிமொழியுரைத்துச் சென்றான் என்பதாம்.

(வி - ரை.) என் காலம் என்பது, கலி ஆட்சிக் காலமாகிய கலியகத்தைக் குறித்தது. கேட்டாரை அடையேன் என்பதிலுள்ள எச்சவும்மை விகாரத்தால் தொக்கது. ஆதலால் கேட்டாரையும் அடையேனென்று உம்மைத் தொகையாகக் கொண்டு சரிதம் எழுதினாரையும் படித்தாரையும் படிப்பித்தாரையும் எழுதுவித்தாரையும் அடையேன் என்று கலி கூறியதாகக் கொண்டு பொருளுரைக்க.

1‘ஒருமொழி ஒழிதன் இளங்கொளற் குரித்தே’

என்பது விதியாகலான். மின்கால் - மின்னலைக் கக்குகின்ற என்னும் பொருளது. கக்குதலாவது, ஒளியை மிகுதியாகத் தருதல். அயில் - கூர்மை. காவி - நீலோற்பலமலர் : ஆகுபெயர். கட்டுரை-பொருள்பொதிந்த சொல். நளனுக்கு, ‘என்காலத்து.........யான் அடையேன்’ என்று உறுதிப்பட உண்மையுரை பகர்ந்தமையால் அது பொருள் பொதிந்த சொல்லாயிற்று. உயர்ந்த பண்புடையவர், சொற்களைத் திறம்படப் பேசுதல் வேண்டும். பயனில்சொல், பொய்யுரைத்தல் முதலியன, மக்கட் பண்புடையவர்க்குச் சாலாதது; அவைகளை நீக்கி உண்மை பேசுதல் வேண்டும்; அவரே இறவாத புகழ்படைத்தோராவர் என்று அறநூல்கள் முழங்கும். (78)

1. நன்னூல் : 358.