பக்கம் எண் :

526நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

வீமன், நளனுக்கு தமயந்திக்கும் குழந்தைகட்கும்
விருந்தளித்தல்

412. வேத நெறிவழுவா வேந்தனையும் பூந்தடங்கண்
கோதையையும் மக்களையும் கொண்டுபோய்த்-தாது
புதையத்தேன் பாய்ந்தொழுகும் பூஞ்சோலை வேலி
விதையக்கோன் செய்தான் விருந்து.

(இ - ள்.) தாது புதைய - மகரந்தப் பொடிமறைய, தேன் பாய்ந்து ஒழுகும் பூஞ்சோலை வேலி - தேன் பெருக்கெடுத்து ஓடுகின்ற மலர்கள் செறிந்த சோலைகளையே வேலியாகக் கொண்ட, விதையக்கோன் - விதர்ப்பநாட்டு அரசனான வீமனானவன், ‘வேத நெறிவழுவா வேந்தனையும் வேதநெறியைக் கடந்து நடவாத ஒழுக்கமுடையவனான நளமன்னனையும், பூந்தடம்கண் கோதையையும் மக்களையும் - தாமரை மலர்போன்ற
பெரிய கண்களையுடைய தமயந்தியையும் அவர்தம் குழந்தைகளையும், கொண்டு போய் விருந்து செய்தான் - (மடைப்பள்ளிக்கண்ணின்றும்) அழைத்துக்கொண்டு அரண்மனைக்குச் சென்று விருந்துண வூட்டினான்.

(க - து.) விதர்ப்பநாட்டு வேந்தனான வீமன், தன் மருகனான நளமன்னனையும் தமயந்தியையும் அவர் மக்களையும் அரண்மனைக்கு அழைத்துச் சென்று விருந்து செய்தான் என்பதாம்.

(வி - ரை.) வேதநெறி - மறைகள்கூறிய ஒழுக்கவழி. நளன், அறநூல்களில் விதிக்கப்பட்ட நல்லனவற்றைச் செய்து தீயனவற்றை நீக்கி யொழுகுவோனாகலான், ‘வேதநெறி பிழையா வேந்தன்’ என்றார். பூ - அழகு என்னலுமாம். தடம் - அகலம். நல்லிலக்கணம் வாய்ந்த பெண்டிர்க்குக் கண்கள் பெரிதாக இருப்பது சிறந்ததென்பது உடற்கூறுவல்லார் கண்ட முடிபு. நாம் கண்கூடாகக் கண்டுவருவதுமாகும்.

1‘அகலல்குல் தோள் கண்ணென மூவழிப் பெருகி’

என்றார் பிறரும். தமயந்தி இவ்விலக்கணமெல்லாம் பொருந்த அமைந்த பேரழகுடையளாதலின் ‘பூ தடங்கண் கோதை’ என்றார். மக்கள் என்றமையால் அவ்விருவர் மக்களைக் குறித்தது ; ஒன்றொழி பொதுச் சொல். உம்மைகள் எண்ணுப் பொருளில்

1. கலித்தொகை : 108.