பக்கம் எண் :

மூலமும் உரையும்527

வந்தன. தாது - பூந்துகள். புதைதல் - மறைதல். விதர்ப்பநாடு நீர் வளனும் நிலவளனும் மிக்குடையது என்பது தோன்ற, ‘பூஞ்சோலை வேலி விதையம் என்றார். விதையம் - விதர்ப்பநாடு என்பதன் மரூஉ. விருந்து - புதுமை என்னும் பொருளது. ஆகுபெயராய் நளன் தமயந்தி குழந்தை இவர்கட்கு உபசரித்து உணவூட்டிக் கொண்டாடிய செயலைக் குறித்து நின்றது. நளன் மருகன் ஆதலானும், வேந்தனாதலானும் முகமன் உரைகூறி விருந்தளித்தான் எனக் கொள்க. (79)

இருதுபன்னன், தன் நகர் போய்ச் சேர்தல்

413. உன்னையான் ஒன்றும் உணரா துரைத்தவெலாம்
பொன்னமரும் தாராய் பொறுக்கென்று - பின்னைத்தன்
மேனீர்மை குன்றா வெறுந்தேர் மிசைக்கொண்டான்
மானீர் அயோத்தியார் மன்.

(இ - ள்.) மால்நீர் அயோத்தியார் மன் - சிறந்த நீர்வளமுள்ள அயோத்தி நகரத்தார்கட்கு வேந்தனான இருதுபன்னன் (நளனைப் பார்த்து), பொன் அமரும் தாராய் - அழகுமிக்க மாலையையுடைய வேந்தே, உன்னை யான் ஒன்றும் உணராது உரைத்த எலாம் பொறுக்க என்று-(நீ என்னிடம் தேரோட்டுந் தொழிலில் அமர்ந்திருந்ததால்) உன்னை இன்னாரென்று அறியாமற் பேசிய சில கடுஞ்சொற்களையெல்லாம் பொறுத்தருளல் வேண்டுமென்று கூறி (மன்னிப்புக் கேட்டுக்கொண்டு), பின்னை தன் மேல்நீர்மை குன்றா வெறும் தேர் மிசை கொண்டான் - அப்பால் (தமயந்தி சுயம்வரமென்று நினைந்து வந்த) தன் மேல்பகட்டுத் தன்மையெல்லாம் ஒடுங்கி, பொலிவற்றிருக்கின்ற தன் தேர்மீதேறி (அயோத்திக்குச்) செல்லப் புறப்பட்டான்.

(க - து.) இருதுபன்னன் நளனை நோக்கி, ‘அரசே ! உன்னை இன்னாரென அறியாது யான் கூறிய கடுமொழிகளையெல்லாம் பொறுத்துக்கொள்க’ வென்று கூறி, மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தன் நகருக்குத் தன் தேரில் புறப்பட்டான் என்பதாம்.

(வி - ரை.) ஒன்றும் - சிற்றளவேனும் என்னும் பொருளது. நளன் இருதுபன்னனிடத்துத் தேரோட்டியாகவும் மடைத்தொழில் புரிபவனாகவும் இருந்து பணிபுரிந்தான். பணிஞனை ஒருமைச் சொல்லால் அழைத்தலும் கடுஞ்சொற் கூறிக் கண்டித்தலும் அவற்குத் தலைமையாயினாரது இயல்பு, இங்கே நளனை