|
அம்முறையில் தான் அழைத்தமை,
பேசியமை யெல்லாம் தன் மனத்தில் இருதுபன்னன்
எண்ணி ‘உன்னை இன்னாரென உணராதநிலையில் இவை
நிகழ்வுற்றனவாகும். அதனை மனத்தில் கருதாது நான்
செய்த இப்பிழைப்பாட்டைப் பொறுத்து மன்னிக்க
வேண்டு’மென நளனை வேண்டினானென்பாராய், ‘பொன்னமரும்
தாராய் பொறுக்க’ என்றான் என்றார். பொன் -
அழகு. திருமகள் என்றலுமாம். இயற்கையழகு பொருந்திய
பொருள்களிலெல்லாம் திருமகள் குடிகொண்டிருப்பள்.
மலர் ஒவ்வொன்றினும் அவள் தன் சாயல்
பொருந்தியிருப்பது என்பதே தமிழ்ப்
பெருமாந்தர்கொண்ட முடிபு. ‘திருவளர் தாமரை’
என்ற சிற்றம்பலக் கோவைப்பாட்டில், ‘திரு-கண்டோரால்
விரும்பப்படும் தன்மை நோக்க முடையது’ எனப்
பேராசிரியர் கூறும் உரையும் காண்க. ஆகலான்,
திருமகள் அமரும் என்ற பொருள் பொருந்தும்.
பொறுக்க என்பதில் பொறுக்கெனக் கடை அகரம்
செய்யுளிசை நோக்கித் தொக்கது. மேல் - வெளி
என்னும் பொருளது; புறத்தில் என்பதாகும். நீர்மை -
தன்மை ; இயல்பு. குன்றா - குன்றியென்னும் பொருளது ;
செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
தமயந்திக்கு இரண்டாம் சுயம்வரம் நிகழ்வதாகக்
கேள்வியுற்று வந்தான் ; நிகழ்ந்தது இவ்வாறு.
அதனால் தன் அகக்கிளர்ச்சி குன்றிற்று ; குன்ற,
வெளியே தன்னை அழகுபடுத்திப் பல்வகை அணி ஆடை
முதலியன புனைதலும் இலனாகி வருந்தியிருந்தான்.
அதனால் வெளித் தோற்றமும்
இழந்திருந்தானென்பாராய்த் ‘தன் மேல் நீர்மை
குன்றா’ என்றார். அரசன் புறப்படுங்கால் தேரைப்
பல்வகை அழகிய ஆடை, மாலை, கொடுங்கை
முதலியவற்றால் அழகுபடுத்திக் குதிரைகளையும் நன்கு
தடவிக்கொடுத்து அதற்கு வேண்டும் அணிமணி
சதங்கையெல்லாம் அமைத்துப் பூட்டுதல் இயற்கை.
ஆனால் இங்கே இருதுபன்னன் கருதினது வேறு ;
நிகழ்ந்தது வேறாக முடிந்தது. தன் தேர்க்குரிய
சாரதியும் வேந்தனாக மாறினன். தேரைத் தெரிந்து
அழகுபடுத்துவார் எவர் ? ஒருவருமிலர். ஆதலால் ‘வெறுந்தேர்’
என்றார். வெறுமை - பொலிவுகுன்றுதல். மிசை - மேல்.
கொள்ளல் - ஏறுதல் : தேரிலேறினான் என்பது
பொருள். (80)
நளன், தன் மனைவி மக்களுடன்
நிடதநாட்டுக்குச் செல்லல்
414. விற்றானை முன்செல்ல வேல்வேந்தர் பின்செல்லப்
பொற்றேர்மேல் தேவியொடும் போயினான்-முற்றாம்பல்
தேனீர் அளித்தருகு செந்நெல் கதிர்விளைக்கும்
மாநீர் நிடதத்தார் மன்.
|