காரை ஒத்தவன் போம்படி கண்டவவ்
ஊரை உற்ற துணர்த்தவும் ஒண்ணுமோ’
எனக் கம்பநாடர் இராமாயணத்தும்
கூறுதலால் அறிக. இம்முறையில் விற்றானை
முன்சென்றது. பின்புறத்தில் அரசன்பால்
அன்புபூண்டொழுகும் வேந்தர்கள் வில்லேந்திய
கையினராய் வருவாராயினர். அதனை, ‘வேல் வேந்தர்
பின்செல்ல’ என்றார். இங்கே சிறப்புப்பற்றி
ஆட்படையாகிய விற்படை வேற்படைகளைக்
கூறினாரேனும் ‘ஒருமொழி ஒழிதன்
இனங்கொளற்குரித்தே’ என்பது கொண்டு யானைப்படை
குதிரைப்படை தேர்ப் படைகளும் சென்றனவெனக்
கொள்க. பொன் தேர்-அழகிய
தேர் என்னலுமாம். பொன்னானியன்ற தேராவது
பொற்றகடுகளால் அமைக்கப்பட்ட தேரெனக் கொள்க.
பொன்னால் தேர் செய்தல் கூடுமோ எனின்,
அரசர்கட்கு அஃதொரு பெரிதில்லை யென்பது அறிந்த
தொன்றாகலான், பொன்தேரென்றே கொள்க.
1‘உருண்ட வாய்தொறும் பொன்னுருள்
உரைத்துரைத் தோடி
இருண்ட கல்லையும் தன்னிற மாக்கிய
இரதம்’
என்னும் கம்பர் காட்டும் கருத்தும்
இதற்கு அரண் செய்யும். தேவியொடும் என்ற
எச்சவும்மை குழந்தைகளையும் குறித்தது.
நிடதநாட்டின்
நீர்வளனும் நிலவளனும் பல்லிடங்களிற்
குறித்தமைபோல ஈண்டும்
நாட்டுச் செழிப்பினையும் வேலியாயிரம் விளையும்
மேம்பாட்டையும் விளக்கற்கு ‘ஆம்பல்
தேனீர்.......செந்நெல் கதிர்விளைக்கும்’
என்றார். மா - கருமை. நீரின் தெளிவுக்குக் கருமை
நிறத்தைக் கொள்வது வழக்கம். கருமையாவது
நீலநிறம். இதனைத் திருவள்ளுவர் 2‘மணி நீரும்’
என்றார். 3‘மாசறத் தெளிந்த மணிநீர் இலஞ்சி’
என்றார் மணிமேகலையினும். மன் - நிலைபேறு ;
அதனையுடையனாகிய அரசற்கு ஆகு பெயர். (81)
தமயந்தி, நளனிடம் ‘நம் நகர் எவ்வளவு
தூரம் ?’ என வினவல்
415. தானவரை வெல்லத் தரித்தநெடு வைவேலாய்
ஏனைநெறித் தூரமினி எத்தனையோ - மானேகேள்
இந்த மலைகடந் தேழுமலைக் கப்புறமா
விந்தமெனும் நம்பதிதான் மிக்கு.
1. கம்பராமா, வரைக்காட்சி: 8.
2. திருக்குறள்: 742. 3. மணிமேகலை: 7.
|