|
கின்றதென அறுதியிட்டுரைப்பின்,
அதனால் மனம் கலங்கி வருந்துவள் என்பதை
உட்கொண்டு, ‘இதோ அண்மையில் தெரிகின்றதே
மலை, இந்த மலையைக்கடந்தால் இதற்கப்புறம்
ஏழுமலைகள் இருக்கின்றன. அவைகளைக் கடந்ததும் நம்
மாவிந்த மாநகரமே’ என்று அவள் மனத்துக்கு ஏற்பக்
கூறி, அவளுக்குக் கிளர்ச்சியூட்டினான். இதனை
ஆசிரியர், ‘சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல்’
என்னும் அழகு தோன்ற, ‘இந்த மலை கடந்தேழு
மலைக்கப்புறம் மாவிந்தம்’ என்றார். இவ்வாறே
கற்புக் கொழுந்தாகிய கண்ணகியார் தம் கணவன்
கோவலனோடு மதுரைக்குப் புறப்பட்ட காலை,
காவிரிப்பூம்பட்டின நகரைக் கடந்து வழியிற்கால்
வைத்தபோதே ‘மதுரை மூதூர் யாதென வினவ’ அது காலை,
1‘ஆறைங் காதம்நம் அகல்நட் டும்பர்
நாறைங் கூந்தல் நணித்து’
என்று, அவ்வினாவிற்குக் கோவலன்
ஆறுகாதம் ஐந்துகாதம் என உரைத்து வழித்தூரம்
மிகைதோன்றாதவாறு சொன்னதும், மிதிலைச்செல்வி
தன் கணவன், கருமுகில் வண்ணனோடு நாடு கடந்து காடு
சென்ற காலை, அயோத்திநகர் மதிற்புற வாயிலைக்
கடக்குமுன் எது காடு என வினவிய காலை,
2‘ஆண்டநகர் ஆரையொடு வாயிலக லாமுன்
யாண்டையது கான்’
என்றதும் இக்கருத்தோடொப்ப
நோக்கி மகிழற்பாலன. (82)
நளன் செல்லுங்கால் சூரியன்
கீழ்திசையில் எழுதல்
416. இக்கங்குல் போக இகல்வேல் நளன்எறிநீர்
செய்க்கங்கு பாயும் திருநாடு - புக்கங்
கிருக்குமா காண்பான்போல் ஏறினான் குன்றில்
செருக்குமான் தேர்வெய்யோன் சென்று.
(இ - ள்.) இகல்வேல் நளன் - வீரம்
பொருந்திய வேற் படையையுடைய நளமன்னன், எறிநீர்
செய்க்கு பாயும் திருநாடு - கரைகளை மோதுகின்ற
நீரானது வயல்களுக்குப் பாய்ந்து செல்கின்ற அழகிய
நிடதநாட்டில், இக்கங்குல் போகபுக்கு அங்கு
இருக்குமா காண்பான்போல் - இன்றிரவு
நீங்கும்படிசென்று அவ்
1. சிலப், 10; 42 - 3.
2. கம்பராமா, சுந்தர, உருக்காட்டு : 6.
|