|
விடத்தே தங்கியிருக்கின்ற
நிலையைப் பார்க்க வருகின்றவன் போல,
செருக்குமான் தேர் வெய்யோன் சென்று குன்றில்
ஏறினான் - ஓட்டம் மிக்க குதிரை பூட்டிய
தேரின்மீது பகலவன் போய்த் தோன்றும் மலையாகிய
கீழ் திசைக்கண்ணின்று புறப்பட்டான்.
(க - து.) நளன் தன் நிடதநாட்டிற்
புகுந்து தங்கியிருப்பதைக் காண வருவான்போல,
சூரியன் தனது தேரில் கீழ்த்திசையாகிய
தோற்றத்துக்குரிய மலைமேல் புறப்பட்டான்
என்பதாம்.
(வி - ரை.) இக்கங்குல் -
இவ்விரவுப்பொழுது. நளனும் தமயந்தியும் இவ்வாறு
வழித்தூரத்தைப் பேசிக்கொண்டே செல்லுங்காலை,
பகற்பொழுது போய் இரவு வந்து, அதுவும் யாமம்
யாமமாகக் கழிந்து விடியற்காலை வந்தது. சூரியனும்
தோன்றினான் என்பது இதனாற் பெறப்படுகின்றது.
ஆசிரியர் ஒரோ இடங்களில் வரலாற்றுப்
போக்கைச் சுருக்கிக்கொண்டே
செல்கின்றாராதலின், இங்கும் சூரியன் மறைந்ததும்
இருள் வந்ததும் பிறவும் கூறாது, சூரியன் தோற்றத்தை
மட்டும் சுட்டி ‘இக்கங்குல்’ என்று துவங்கி, ‘தேர்
வெய்யோன் சென்று’ என்று முடித்தார். இதன்
உள்ளுறை பொருளாக அமைந்தது, சூரியன் தோன்றிய
காட்சி, நளன் தன் நிடதநாட்டிற்சென்று
தங்கியிருப்பது எவ்வளவு சிறப்பாக இருக்கின்றது
என்பதை நன்கு கண்டு உணர்தற்குப் புறப்பட்டுவர
ஆயத்தஞ்செய்து விரைபரி பூட்டிய தன் தேர்
மீதேறிக் கீழ்த்திசைக்கண் தோன்றினானெனத் தற்குறிப்பேற்ற
அணிதோன்றக் குறித்தார். இருக்கும்+ஆ -
இருக்குமாறு. ஈறுகெட்டது. 1‘கொள்ளுமா
கொள்வோர்க்கு’ என்புழிப்போல. சூரியன்
தோற்றமளிக்குங்கால் செந்நிறத்தோடு பல்வகை
மேகப்படலங்கள் மலைகள்போல் உயர்ந்தும்
தாழ்ந்தும் வான் தோற்றமளித்தலால் குன்றென்று
கூறுவர். அதன்மேல் பகலவன் தோன்றிக்
காட்சியளிப்பது மலைமேல் ஏறி வருவதுபோல்
தோன்றும். மாலைப்பொழுதும் இவ்வாறே தோன்றும்.
ஆகவே இவையிற்றை வடநூலார் உதயகிரி, அத்தகிரியென்பர்.
அதனால் ‘ஏறினான் குன்றில்’ என்றார். ஏறினான்
என்னும் சொல்லினால் சூரியன் தோற்றமென்பது
பெறப்பட்டது. குன்றில் ஏறுவதுபோன்று
தோற்றமளிப்பதை மக்கட்குச் சுவையின்பம் பயக்க
இவ்வாறு அழகுமிக்க தொடராக அமைத்து ஆசிரியர்
கூறினார். ‘இலக்கணக் கவிஞர் சொல் இன்பந்
தேடுவர்’ என்பதற்கேற்ப.(83)
1. நீதிநெறி விளக்கம்: 28.
|