பக்கம் எண் :

534நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

நளன், மாவிந்த நகரின் ஒரு சோலையில் தங்குதல்

417. மன்றலிளங் கோதையொடு மக்களும் தானுமொரு
வென்றி மணிநெடுந்தேர் மேலேறிச்-சென்றடைந்தான்
மாவிந்தம் என்னும் வளநகரம் சூழ்ந்தவொரு
பூவிந்தை வாழும் பொழில்.

(இ - ள்.) மாவிந்தம் என்னும் வளநகரம் சூழ்ந்த - மாவிந்த மாநகரமென்னும் பெயரமைந்த வளப்பம் பொருந்திய நகரத்தைச் சுற்றியமைந்துள்ள, பூ விந்தை வாழும் ஒரு பொழில் - மலர்கள் வெவ்வேறு காட்சிகளுடன் தோற்றமளிக்கின்ற ஒப்பற்ற சோலையிடத்தே, (நளமன்னனானவன்), மன்றல் இளங்கோதையொடு மக்களும் தானும் - மணங்கமழுகின்ற மெல்லிய கூந்தலையுடைய தன் மனையாளாகிய தமயந்தியுடன் குழந்தைகளும் தானும், வென்றி மணி நெடுந்தேர்மேல் ஏறி சென்று அடைந்தான் - வெற்றிபொருந்திய மணிகள் கட்டிய நீண்ட தேரின்மேல் ஏறிப்போய்ச் சேர்ந்தான்.

(க - து.) நளன் தன் மனைவி மக்களோடு ஒரு வெற்றி பொருந்திய தேரின் மீதேறிச்சென்று, அழகிய மலர்கள் பூத்திருக்கின்ற மாவிந்தமாநகர்ச் சோலையைச் சென்றடைந்தான் என்பதாம்.

(வி - ரை.) மன்றல் - மணம்; இளமை. ஈண்டு மென்மையென்னும் பொருட்டு. கூந்தலுக்கு மணமுள்ள எண்ணெய் பூசுதலாலும் பல்வகை மணமலர்கள் சூட்டுதலாலும் மணம் தங்குவதாயிற்று. அதனால் தமயந்தியின் கூந்தலழகுச் சிறப்புக் கூறினார். கோதை - கூந்தல் : ஆகுபெயர். தான் - நளன். வென்றி - வெற்றி. நளன்தேர் வென்றே மீளும் சிறப்புடையது ஆகலான், நளன் தன்மைக்கு வெற்றி மேம்பாட்டுக்கு எடுத்துக் காட்டு. 1‘வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன்’ என்றார் கம்பரும். பூவிந்தை என்பதற்கு பூவில் வீற்றிருகின்ற திருமகளென்று கூறுலுமாம். அஃது அவ்வளவு பொருட்சிறப்பின்று. இங்கே சோலைக்கு ஏற்றங் கூறுகின்ற இடம்; சோலைக்குச் சிறப்பு பல்வகை மரச்செறிவும் அம்மரங்களிடையே தளிரும் இலையும் பூவும் பிஞ்சும் காயும் கணியும் பல்கி அவைகளை விரும்பி வருகின்ற வண்டும் கிளியும் பிற பறவைகளும் குயிலும் மயிலும் சேர்ந்து வாழ, அதனால் பார்ப்பவர் கண்ணுக்கினிமையும் காதுக்

1. கம்ப, உயுத்த, முதற்போர்: 248.