|
(க - து.) சிவபெருமான் நம்மைப்
பாதுகாக்கும் கடவுளராவர் ; வணங்குவோம்.
(வி - ரை.) கலாபம் - மயில்தோகை.
மயில்போன்ற சாயலுடைய உமையம்மையை
மயிலென்றார். இது, உவமைத்தொகை நிலைக்களத்துப்
பிறந்த அன்மொழித்தொகை. நிலவு - அதன் ஒளியைக்
குறித்தலால் முதலாகு பெயர். பாகத்தார்,
நீற்றார், ஆர்த்தார், வினையாலணையும் பெயர்கள்;
ஈண்டுச் சிவபெருமான்.
இறைவன் பெண்ணொரு கூறுடையனாக இருந்து
உலகத்தைக் காத்தும் படைத்தும் கரந்தும்
விளையாடுகின்றானென்பது, சைவசமயப் புராணமரபு.
1‘நீலமேனி வாலிழை பாகத்து, ஒருவன்’
எனவும், 2‘பெண்உரு ஒருதிறன் ஆகின்று’
எனவும், சங்க நூல்களினும், 3‘பெண்ணாகிய பெருமான்’
எனத் திருஞான சம்பந்தரும் பிற ஆன்றோர்களும்
கூறுதல் காண்க.
உலகத்தைக் கூர்ந்து நோக்கினால்
உயிருடைப் பொருள்கள்யாவும் ஆண் பெண் என
இருவகைப் பகுப்பாகவே இலங்குகின்றன. ஏனை
உயிரில்லாத பொருள்களைத் தொழிற்படுத்த
முற்பட்டால், இரண்டு பொருள்கள் கூடினால்தான்
செய்ய இயல்கின்றது. ஒரு பொருளை வைக்கும் செப்பை
யெடுத்துக்கொள்வே மானால் அது மேல்மூடியுடன்
இணைந்துள்ளது. பெட்டிக்க அடிப்பாகம் மேல்பாகம்,
பூட்டுக்கு பூட்டு திறவுகோல் ஆகிய இரண்டுபொருள்
வேண்டும். இவைகளைப் போன்றே உலகத்தோற்ற
ஒடுக்கத்தைச் செய்யும் முழுமுதல்வனுக்கு ஆணுரு
பெண்ணுருவாகிய ஈருருவம் வேண்டுமென்று கருதினர் ;
அவ்விறை அவ்வியற்கையனாக இருத்தலால், பெண்ணொரு
கூறுடையனாகக் கொண்டு அம்மையப்பனாக வழிபட்டனர்.
அதனால் ‘கலாப மயிலிருந்த பாகத்தார்’
என்றார்.
இதில் இறைவன் நாகத்தை
யணிந்ததென்பது, வேண்டுதல் வேண்டாமை இல்லாத
அவன் பேரருளின் அடையாளமாகக் குறித்ததாம்.
காப்பு - காவல்: தொழிற்பெயர்;
காவலுடைய இறைவனைக் குறித்தலால், தொழிலாகு
பெயர். (4)
1. ஐங்குறுநூறு : 1. 2. புறம் : 1.
3. திருஞானசம் ; தேவாரம், பதி, 10 : 1.
|