பக்கம் எண் :

8

     (இ-ள்.) அங்கச விரோதியே - மன்மதனை அழித்தவனே!,
சோதியே - ஒளியே!, நீதிசேர் அரசன் - முறை தவறா அரசனான,
எமது ......... தேவனே!, தம் குலம் விளங்கிடப் பெரியோர்கள் செய்துவரு
தருமங்கள் செய்து வரலும் - தம் மரபு புகழ்பெற அறிஞர்கள் புரிகின்ற
அறங்களை விடாது புரிதலும், தன்மம் மிகு தானங்கள் செய்தலும் -
பொருளீட்டும் வலிமையற்றோர்க்குச் செய்யும் தருமமும், நல்லோர்க்கு
உதவும் தானமும் ஆகிய இவற்றைச் செய்வதும், கனயோக சாதகன்
எனப்படுதலும் - பெரும்புகழுக்கேதுவான இலக்கணமுடையோன் என்பதும்,
மங்குதல் இலாத தன் தந்தைதாய் குருமொழி மறாது வழிபாடு செயலும் -
குன்றாத தன் பெற்றோர்களின் மொழியையும் ஆசிரியர் மொழியையும்
தட்டாமற் பணிபுரிதலும், வழிவழி வரும் தமது தேவதா பத்திபுரி
மார்க்கமும் - பரம்பரையாகச் செய்துவரும் தங்கள் தெய்வ வழிபாட்டு
நெறியில் நிற்றலும், தீர்க்க ஆயுளும் - நீண்டவாழ்நாளும், இங்கித
குணங்களும் - நற்பண்புகளும், வித்தையும் - கல்வியும், புத்தியும் -
அறிவும், ஈகையும் - கொடையும், சன்மார்க்கமும் - நல்லொழுக்கமும்,
(ஆகிய) இவையெலாம் உடையவன் புதல்வன் ஆம் - இவற்றை யெல்லாம்
உடையவன் நன்மகனாவான், அவனை ஈன்றவனே புண்யவான் ஆம் -
அவனைப் பெற்றவனே நல்வினை யுடையவன் ஆவான்.


     (வி-ரை.)
அங்கம் இலாதவன் அங்கசன் (வட) - மன்மதன்.
பண்டைக் காலத்திலே கொடையாக இருந்தது இடைக்காலத்திலே தான
தருமங்களாக மாறியிருத்தல் வேண்டும். ‘யானைக்கில்லை தானமும்
தருமமும'் என்று கூறுவதையுங் காண்க. சாதம் (வட) - பிறப்பு. சாதகம்
- பிறப்புக்குறிப்பு. மார்க்கம் (வட) - நெறி. தீர்க்க + ஆயுள் -
தீர்க்காயுள் (வட) - நீண்ட வாழ்நாள். புண்ணியம் (வட) - நன்மை.


     (க-து.)
நன்மகன் இங்குக் கூறிய பண்புகளெலாம் உடையோனாவான்.