பக்கம் எண் :

110

           71. தீவும் கடலும்

நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவு
     லட்சம்யோ சனை;இ தனையே
  நாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்
     நற்கழைச் சாற்றின் கடல்;
மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்
     மிகுமதுக் கடல்;அ தனையே
  விழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்
     மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;
பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்; இங்கிதைப்
     போர்ப்பது திருப்பாற் கடல்;
  போவதது சூழ்தல்சான் மலிதீவம் ஆம்; தயிர்ப்
     புணரிஅப் பாலும் அப்பால்
ஆவலுறு புட்கரத் தீவாம் இதைச்சூழ்வ
     தரும்புனற் றருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அருமை ...... தேவனே!, நாவல்அம் தீவினைச் சூழ் கருங்கடல்
அளவு லட்சம் யோசனை - நாவலந் தீவாகிய இதனைச் சூழ்ந்த கருங்கடலின்
பரப்பு இலட்சம் யோசனை, இதனையே நாள்தொறும் சூழ்வது இலவம்தீவு -
இந்தக் கடலை எப்போதும் சூழ்ந்திருப்பது இலவந்தீவு, அதைச் சூழ்தல்
நல்கழைச் சாற்றின் கடல் - அதனைச் சூழ்ந்திருப்பது இனிய கருப்பஞ்சாற்றுக்
கடல், மேவும் இது சூழ்வது குசத்தீவு - பொருந்திய இதனைச் சூழ இருப்பது
குசத்தீவு, அதைச் சூழ்தல் மிகும் மதுக்கடல் - குசத்தீவைச் சூழ்வது மிகுந்த
மதுவின் கடல், அதனை விழைவுடன் சூழ்தல் கிரவுஞ்ச தீவம் - மதுக்கடலை
விருப்பத்துடன் சூழ்ந்திருப்பது கிரவுஞ்ச தீவு, இதனின்மேற் சூழ்தல்
நெய்க்கடலது ஆம் - கிரவுஞ்சத் தீவினைச் சூழ்ந்திருப்பது நெய்க்கடல்