பக்கம் எண் :

122

பசிய குவளை மலர்மாலை அணிந்த மார்பனாகிய பெருமை மிக்க எம் அரிய
மதவேள், அனுதினமும் ..... தேவனே!, சித்திரை திங்கள் பதின்மூன்றுக்குமேல்
நல்ல சீரான பரணி மழையும் - சித்திரைத் திங்களிற் பதின்மூன்று
நாட்களுக்குமேற் புகழ்பெற்ற பரணிநாளிற் பெய்யும் மழையும், தீது இல்
வைகாசியிற் பூரணை கழிந்தபின் சேரும் நாலாம் நாளினில் ஒத்துவரும்
மழையும் - குற்றம் அற்ற வைகாசித் திங்களில் முழுமதிக்குப் பிறகு வரும்
நாலாம் நாளிற் சரியாகி வரும் மழையும், அ ஆனியில் தேய் பிறையில்
ஓங்கும் ஏகாதசினியில் ஒளிர் பரிதி வீழ் பொழுதில் மந்தாரமும் மழையும் -
அந்த ஆனித் திங்களில் தேய்பிறையிலே சிறப்புறும் ஏகாதசியில் ஒளிவிடும்
ஞாயிறு மறையும்போது மந்தாரத்துடன் பெய்யும் மழையும், உண்டாயிருந்து -
பெய்திருந்து, ஆடியில் பத்தி வரு தேதி ஐந்தினில் ஆதிவாரமும் - ஆடித்
திங்களில் ஒழுங்காக வரும் ஐந்தாம் நாளில் ஞாயிற்றுக்கிழமையும், பகரும்
ஆவணி மூலநாள் பரிதியும் மறைந்திடக் கனமழை பொழிந்திட - கூறப்படும்
ஆவணித்திங்களில் மூலநாளில் ஞாயிறு மறைந்தபிறகு, பெருமழை பெய்தலும்
நேர்ந்தால், பாரில் வெகு விளைவும் உண்டாம் - உலகில் மிகுந்த விளைவு
உண்டாம்.


     (வி-ரை.)
குவளைமலர்மாலை வேளாளருக்குரியது.

           80. பயனிலாதவை

சமயத்தில் உதவாத நிதியம்ஏன்? மிக்கதுயர்
     சார்பொழுது இலாத கிளைஏன்?
  சபை முகத்துத வாத கல்விஏன்? எதிரிவரு
     சமரத்திலாத படைஏன்?
விமலனுக் குதவாத பூசைஏன்? நாளும்இருள்
     வேளைக்கிலாத சுடர்ஏன்?
  வெம்பசிக்குதவாத அன்னம் ஏன்? நீடுகுளிர்
     வேளைக் கிலாத கலைஏன்?