பக்கம் எண் :

135

வேறு ஒருவர் தந்திடினும் மனுமொழி அறிந்தபேர் விலை கொடுத்தே
கொள்ளுவார் - மற்றொருவர் கொடுத்தாலும் மனு கூறிய முறையை
அறிந்தவர்கள் விலை கொடுத்துத் தான் வாங்குவார்கள், தேன் கனி கிழங்கு
விறகு இலை இவை அனைத்தையும் தீண்ட அரிய நீசர் எனினும் சீர் பெற
அளிப்பரேல் - தேனையுங் கனியையுங் கிழங்கையும் விறகையும்
இலையையும் இவை (போன்ற) யாவற்றையும் தீண்டத்தகாத
இழிந்தோரானாலும் சிறப்புறக் கொடுத்தாரானால், சீலம் உடையோர் இகழாது
கைக்கொள்வர் - ஒழுக்கம் உடையோர் பழிக்காமல் ஏற்றுக்கொள்வர்.


     (வி-ரை.)
ஆல் : அசை. ஈசன் - செல்வமுடையோன்.

        89. முப்பொருள் (தத்துவத் திரயம்)

பூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம்
     பொருந்துமிந் திரிய மைந்தும்,
  பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்
     புகலரிய கரணம் நான்கும்,
ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;
     உயர்கால நியதி கலையோ
  டோங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை யென்
     றுரைசெய்யும் ஓரே ழுமே
தீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால்
     திகழ்சுத்த வித்தை ஈசன்,
  சீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே
     சிவதத்வம் என்ற றைகுவார்;
ஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே.