பக்கம் எண் :

11

ஆதார மாய்உயிர்க் குயிராகி யெவையுமாம்
     அமல! எமதருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆதாரமாய் உயிர்க்கு உயிராகி எவையும் ஆம் அமல -
உலகுக்கு ஆதரவாய், உயிர்களுக் கெல்லாம் உயிராகி, எவ்வகைப்
பொருளும் ஆகிய தூய பொருளே! எமது .......... தேவனே!' வேதாந்த
சித்தாந்த வழிதெரிந்து - வேதாந்த சித்தாந்த நெறிகளை ஆராய்ந்தறிந்து,
ஆசார விவரம் - ஒழுக்கத்தெளிவு, விஞ்ஞான பூர்ணம் - விஞ்ஞானத்தின்
நிறைவு, வித்தியா விசேடம் - கல்விச் சிறப்பு, சற்குணம் - நற்பண்பு,
சத்தியம் சம்பன்னம் - உண்மையாகிய செல்வம், வீரவைராக்கியம் -
உறுதியான வீரம் (மிகுவீரம்), முக்கியம் - தலைமை, சாதாரணப் பிரியம் -
அருள், யோகமார்க்க ஆதிக்கியம் - யோக நெறியிலே மேன்மை (என்பவற்றுடன்), சமாதி நிஷ்ட அனுபவராய் - சமாதி கூடுதலிற் பயிற்சி
யுடையவராய், சட்சமய நிலைமையும் மேலான மந்திரம் மேலான தந்திரம்
என்பவற்றின் நிலையையும், பரசமயமும் - பிற மதங்களையும், நீதியின்
உணர்ந்து - நெறிப்படி அறிந்து, தத்துவ மார்க்கராய் - உண்மை
நெறியினராகி, பிரம நிலைகண்டு - தூய பொருளின் நிலையை அறிந்து,
பாசம் இலராய் - (உலகப்) பற்று நீங்கியவராய், நித்திய ஆனந்த
சைதன்யராய் - உண்மையின்ப அறிவுருவினராய், ஆசை அறு
நெறியுளோர் - பற்றற்ற நெறியில் நிற்போர். சற்குரவர்ஆம் -
நல்லாசிரியராவார்.


     (வி-ள்.)
சாதாரணம் - பொது. பிரியம் - அன்பு. எனவே,
சாதாரணப் பிரியம் அருளாயிற்று. அன்பு முதிர்ந்தால் அன்பின் வழியே
அருள் பிறக்கும். அருள் - யாவரிடமும் செலுத்தும் அன்பு.
‘அருளென்னும் அன்பீன் குழவி' என்றார் வள்ளுவர். இச் செய்யுள்
வடமொழிகளால் ஆக்கப்பட்டுள்ளது. வீரத்தின் தொடர்பு வைராக்கியம்
(ஒரு பொருட் பன்மொழி.)


     (க-து.)
இங்குக் கூறியவை நல்லாசிரியரின் இயல்.