பக்கம் எண் :

16

கோதையர்களோடு பரிகாசம் செய ஒண்ணாது - பிற மங்கையருடன்
நகைத்துப் பேசுதல் கூடாது, கோள் உரைகள் பேச ஒணாது - கோள்
மொழிகள் கூறல் கூடாது, நஞ்சு தரும் அரவொடும் பழக ஒணாது - நஞ்சைத்
தரும் பாம்பொடு பழகல்கூடாது, இருள்வழி நடந்து தனி ஏக ஒணாது -
இருண்ட நெறியிலே தனியே நடந்து செல்லல் கூடாது, நதி பெருக்கு ஆகின்
அதில் நீஞ்சல் செய்ய ஒண்ணாது - ஆறு பெருகிச்சென்றால் அதை நீந்திச்
செல்லுதல் கூடாது, நல்வழி மறக்க ஒணாது - நன்னெறியை மறத்தல் கூடாது
அஞ்சாமல் அரசர்முன் பேச ஒணாது - அரசரிடம் அச்சமின்றிப் பேசுதல்
கூடாது.


     (வி-ரை.)
‘மருவ ஒணாது; மருவ வொணாது' என வருதல் வேண்டும்;
மருவ என்பதன் ஈற்றிலுள்ள அகரம் செய்யுள் விகாரத்திற் கெட்டதாகையால்
‘மருவொணாது' என வந்தது. பின் வந்தனவும் அவ்வாறே கெட்டு வந்தன.
‘ஒண்ணாது' என்பது ‘ஒணாது' என வருவது இடைக்குறை.


     (க-து.)
இங்குக் கூறப்பட்டவை செய்ய ஒண்ணாதவை.

         9. ஒன்றற்கொன்று அழகு

வாழ்மனை தனக்கழகு குலமங்கை; குலமங்கை
     வாழ்வினுக் கழகு சிறுவர்;
  வளர்சிறுவ ருக்கழகு கல்வி;கல் விக்கழகு
     மாநிலம் துதிசெய் குணமாம்;
சூழ்குண மதற்கழகு பேரறிவு; பேரறிவு
     தோன்றிடில் அதற்க ழகுதான்
  தூயதவம், மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை
     சொல்லரிய பெரியோர் களைத்
தாழ்தல், பணி விடைபுரிதல், சீலம், நேசம், கருணை
     சாற்றுமிவை அழகென் பர்காண்
  சௌரி, மல ரோன், அமரர், முனிவர், முச்சுடரெலாம்
     சரணம்எமை ரட்சி யெனவே.