பக்கம் எண் :

20

     (இ-ள்.) அமல - குற்றம் அற்றவனே! எமது ......... தேவனே!, பூத
தயை இல்லாத லோபிய ரிடத்திலே பொருளை அருளிச் செய்தனை -
உயிர்களிடம் இரக்கம் காட்டாத கஞ்சரிடத்திலே செல்வத்தைக்
கொடுத்தருனினை, புண்ணியம் செய்கின்ற சற்சனரிடத்திலே பொல்லாத
மிடி வைத்தனை - நன்மை புரிகின்ற நல்லோரிடம் கொடிய வறுமையைக்
குடியாக்கினாய், நீதி அகல் மூடர்க்கு அருந்ததி எனத்தக்க நெறி
மாதரைத் தந்தனை - அறத்தின் நீங்கிய அறிவிலிகளிடம் அருந்ததி
போன்ற கற்புடைய காரிகையரைச் சேர்த்தாய், நிதானம் உள உத்தமர்க்கு
இங்கிதம் இலாத கொடு நீலியைச் சேர்வித்தனை - அமைதியான
நல்லோர்களுக்குக் குறிப்பறிந்து நடவாத கொடிய புரட்டியைக்
கூட்டிவிட்டாய், சாதியில் உயர்ந்த பேர் ஈனர் பின்னே சென்று தாழ்ந்து
பரவச் செய்தனை - உயர்குடியிலே தோன்றியவர்கள் இழிந்தவரின்
பின்போய் வணங்கிப் போற்றப் புரிந்தாய், தமிழ் அருமை அறியாத
புல்லர்மேல் கவிவாணர் தாம் பாடவே செய்தனை - தமிழின் இனிமையைக்
காணாத கயவரைக் கவிஞர்கள் பாடுமாறு புரிந்தாய், இப்படி ஆதரவு
இல்லாமல் செய்தது ஏன்? சொலாய்! - இவ்வாறு ஒருவர்க்கொருவர்
பற்றில்லாமற் பண்ணினது ஏன்? கூறுவாயாக.


     (வி-ரை.)
பூதம் (வட) - உயிர். இங்கிதம் - குறிப்பு. அருந்ததி -
வசிட்டரின் மனைவி. நீலி - வஞ்சகி. நீலியென்பவள் பழையனூரில் ஒரு
வணிகன் மனைவி. இவள் இறந்தபின் பேயானாள். கணவன் காஞ்சிபுரம்
செல்கையில் ஒரு கள்ளிக்கட்டையைக் குழவியாக்கிக்கொண்டு அவன்
மறுமண மனைவியைப்போல் வடிவமெடுத்துப் பின்தொடர்ந்தாள். அவன்
பேயென அஞ்சினான். காஞ்சியிற் சபையோர்முன் தான் அவன்
மனைவியென நம்பச்செய்தாள். அவர்கள் வணிகனுடன் அவளையும்
ஒருவீட்டில் இருத்தினர் கதவைத் தாழிட்டு அவனைக் கொன்று மறைந்தாள்.
இவ்வாறு ஒரு கதையுண்டு.

     (க-து.)
ஒற்றுமைப் பண்பில்லாதவர் ஒருங்கே வாழ்தல் அரிது.