பக்கம் எண் :

21

             12. பதர்

மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே
     வாயிலா தவனொரு பதர்;
  வாள்பிடித் தெதிரிவரின் ஓடிப் பதுங்கிடும்
     மனக்கோழை தானொரு பதர்;
ஏறா வழக்குரைத் தனைவருஞ் சீசியென்
     றிகழநிற் பானொரு பதர்;
  இல்லாள் புறஞ்செலச் சம்மதித்தவளோ
     டிணங்கிவாழ் பவனொரு பதர்;
வேறொருவர் மெச்சாது தன்னையே தான்மெச்சி
     வீண்பேசு வானொரு பதர்;
  வேசையர்க ளாசைகொண் டுள்ளளவும் மனையாளை
     விட்டுவிடு வானொரு பதர்;
ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்தருள்செய்
     அமல! எமதருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) ஆறாத துயரையும் மிடியையும் தீர்த்து அருள்செய் அமல!
- தணியாத துயரத்தையும் வறுமையையும் போக்கி அருள்புரியும் தூயவனே!
‘எமது ....... தேவனே!' மாறாத கலைகற்றும் நிலைபெற்ற சபையிலே வாய்
இலாதவன் ஒரு பதர் - திரிபு இல்லாத நூல்களையறிந்தும் நிலைபெற்ற
அவையிலே (கற்றதைக்) கூறுந்திறமையற்றவன் ஒரு மக்கட்பதர், வாள்
பிடித்து எதிரிவரின் ஓடிப் பதுங்கிடும் மனக்கோழைதான் ஒரு பதர் -
எதிரி வாளேந்திப் போருக்கு வந்தால் அஞ்சியோடி மறைந்திடும்
மனவுறுதியற்றவன் ஒரு பதர், ஏறா வழக்கு உரைத்து அனைவரும் சீசி!
என்று இகழ நிற்பான் ஒரு பதர் - செல்லாத வழக்கைச் செப்பி, யாவரும்
சீசி! எனப்பழிக்கும்படி நிற்பவன் ஒரு பதர், இல்லாள் புறம்செலச்