பக்கம் எண் :

28

வழக்கு அழிவு புகலாத நிலைகொள் பேரும் - நிலையற்ற செல்வத்தைக்
கோடிக்கணக்காக ஒருவர் கொடுத்தாலும் அழிவழக்குக் கூறாத
நிலையுடையவரும், புவிமீது தலைபோகும் எனினும் கனவிலும் பொய்ம்மை
உரையாத பேரும் - உலகத்திலே தலைபோகும் என்றாலும் கனவிலேயும்
பொய் புகலாதவரும், இங்கு இவரெலாம் ஐய சற்புருடர் என்று உலகர்
அகம் மகிழ்வர் - இவ் வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகாகிய
நன்மக்கள் என்று உலகமாந்தர் மனம் களிப்பார்கள்.


     (வி-ரை.)
செல்வம் நிலையற்றது. எனவே, அது, ‘பொய்யொன்று நிதி'
எனப்பட்டது. ‘வழக்கழிவு' என்பதை ‘அழிவழக்கு' என மாற்றுக;
‘அடாவழக்கு' என்றும் கூறுவர். ஐ - அழகு. ஐய - ஐயனே! என
அறப்பளீசுர தேவனுக்கு ஆக்கினும் அமையும்.


     (க-து.)
செய்ந்நன்றி மறவாமை முதலானவை நன்மக்களின் பண்புகள்.

             17. நல்லோர் - 2

அடைக்கலம் எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்
     அவனே மகாபுரு டனாம்;
  அஞ்சாமல் எதுவரினும் எதுபோ கினும்சித்தம்
     அசைவிலன் மகாதீ ரனாம்;
தொடுத்தொன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற
     தோன்றலே மகரா சனாம்;
  தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத
     துரையே மகாமே ருவாம்!
அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த் திரட்சிக்கும்
     அவனே மகாதியா கியாம்;
  அவரவர் தராதரம் அறிந்துமரி யாதைசெயும்
     அவனே மகாஉசி தன்ஆம்;