பக்கம் எண் :

34

சங்கிலும், மிக்கோர்கள் வாக்கில் - பெரியோர் மொழியிலும், பொய்யாத
பேர்பாலில் - பொய் மொழியாதவரிடத்திலும், பூந்தடந்தன்னில் - மலர்ப்
பொய்கையிலும், பாற்குடத்திடையில் - பாற் குடத்திலும், போதகத்தின்
சிரசில் - யானையின் தலையிலும், அல்பெருங்கோதை மலர்மங்கை
வாழ்இடம் என்பர் - இருண்ட நீண்ட கூந்தலையுடைய திருமங்கை வாழும்
இடம் என்பர் அறிஞர்.

      (வி-ரை.) ஏகாரங்கள் யாவும் அசைநிலைப் பொருளில் வந்தவை.
நாகரிகம் - கண்ணோட்டம், அதாவது நண்பர் உரிமையாற் செய்த
பிழையை மன்னித்தல், வள்ளுவர், ‘பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர்
நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்' எனக் கூறினார். இங்குக் கூறியவை
காட்சியழகும் பண்பழகும் உடையவையாக இருத்தலைக் காண்க. திருமகள்
- அழகு, செல்வம் இவற்றின் தெய்வமாக வழிபடப்படுவதையும் உணர்க.

      (க-து.)
திருமகள் பரியின் முகம் முதலான அழகிய இடங்களில்
இருப்பாள்.


          21. மூதேவி இருப்பிடம்

மிதம்இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,
     மிகுபாடை யோ ரிடத்தும்,
  மெய்யொன் றிலாமலே பொய்பேசி யேதிரியும்
     மிக்கபா தகரிடத்தும்,
கதியொன்றும் இலர்போல மலினம்கொ ளும்பழைய
     கந்தையணி வோரி டத்தும்
  கடிநா யெனச்சீறி எவரையும் சேர்க்காத
     கன்னிவாழ் மனைய கத்தும்,
ததிசேர் கடத்திலும், கர்த்தபத் திடையிலும்,
     சார்ந்தஆட் டின்தி ரளிலும்
  சாம்பிண முகத்திலும் இவையெலாம் கவலைபுரி
     தவ்வைவாழ் இடமென்பர் காண்!