பக்கம் எண் :

37

என்ன - மலராமற் குவிந்திருந்தால்தான் என்ன பயன்?, மதுரம் இல்லா
உவர்க்கடல் நீர் கறுத்து என்ன - சுவையில்லா உப்புக்கடலின் நீர்
கருநிறமாக இருந்தால் என்ன பயன்?, மாவெண்மை ஆகில் என்ன - தூய
வெண்மையாக ஆனால்தான் என்னபயன்?, உணவு அற்ற பேய்ச்சுரை
படர்ந்து என்ன - உண்ணத்தகாத பேய்ச்சுரைக்கொடி படர்ந்து என்ன
பயன்?, படராது உலர்ந்துதான் போகில் என்ன - படராமல்
காய்ந்துபோனால்தான் என்ன பயன்?, உதவாத பேர்க்கு வெகு வாழ்வு
வந்தால் என்ன - (பிறர்க்குப்) பயன்படாதவர்கட்குச் சிறந்த வாழ்வு வந்தால்
என்ன பயன்?, ஓங்கும் மிடி வரில் என்னகாண் - பெரிய வறுமை
வந்தால்தான் என்ன பயன்?

     (க-து.) மற்றவர்க்குப் பயன்படாப் பொருளின் வாழ்வினும்
தாழ்வினும் எப்பயனும் பிறர்க்கு இல்லை.


        23. குறைந்தாலும் பயன்படல்

தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்
     சார்மணம் பழுதா குமோ!
  தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டு
     சாரமது ரங்கு றையுமோ?
நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்
     நீள்குணம் மழுங்கி விடுமோ?
  நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்
     நிறையுமாற் றுக்கு றையுமோ?
கறைபட்ட பைம்புயல் மறைத்தாலும் அதுகொண்டு
     கதிர்மதி கனம்போ குமோ?
  கற்றபெரி யோர்மகிமை அற்பர் அறிகிலரேனும்
     காசினி தனிற்போ குமோ?
அறிவுற்ற பேரைவிட் டகலாத மூர்த்தியே!
     ஐயனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!