(இ-ள்.)
அள்ளாத இருங் கருணையாளனே - குறையாத
பேரருளாளனே!, தேவர் தொழும் ஆதியே - அமரர் வணங்கும்
முதல்வனே!, அருமை .......... தேவனே!, உள்அன்பு இலாத பேர்
தித்திக்கவே பேசி உறவாடும் உறவும் உறவோ - மனத்திலே அன்பு
இல்லாதவர்கள் இனிமையாக உரையாடி உறவாடுகின்ற போலியுறவும்
உறவாகுமோ?, அன்புடன் உபசரித்து பரிமாறிடாத சோறு உண்டவர்க்கு
அன்னம் ஆமோ - அன்போடு முகமன் கூறிப் படைக்காத சோற்றை
உண்டவர்க்கு நலந்தரும் உணவு ஆகுமோ?, தள்ளாது இருந்துகொண்டு
ஒருவர் போய்ப் பார்த்து வரு தக்க பயிர் பயிர் ஆகுமோ - ஊக்கமின்றி
வீட்டில் அமர்ந்துகொண்டு மற்றொருவர் சென்று பார்த்துவரும் நல்ல பயிர்
நல்ல பயன் தருமோ?, தளகர்த்தன் ஒருவன் இல்லாமல் முன்சென்றிடும்
தானையும் தானை ஆமோ - படைத்தலைவன் ஒருவன் இல்லாமல்
முன்னோக்கிச் செல்லும் படையும் வென்றிதரும் படையாகுமோ? விள்ளாத
போகம் இல்லாத பெண்மேல் வரும் விருப்பமும் விருப்பம் ஆமோ -
பிளவுபடாத இன்பத்திற்குத் தகுதி அற்ற பெண்ணின்மேல் உண்டாகும்
ஆசையும் மகிழ்வுதரும் ஆசையாகுமோ? வெகு கடன்பட்டபேர்
செய்கின்ற சீவனமும் மிக்க சீவனம் ஆகுமோ - மிகு கடன்
கொண்டவர்கள் நடத்தும் வாழ்க்கையும் இனிய வாழ்க்கை ஆகுமோ?
(வி-ரை.)
தள்ளாமை - மனவூக்கம் இன்மை (உலகவழக்குச்சொல்).
அள்ளாத என்பதன் இறுதி அகரம் செய்யுள் விகாரத்தால் தொக்கது.
அள்ளுதல் - எடுத்தல். அது இங்குக் குறைத்தல் என்னும் பொருளில்
வந்தது. இருமை + கருணை - இருங்கருணை. இருமை - பெருமை.
விள்ளுதல் - பிளவுபடுதல். விள்ளாத போகம் - முற்றிய இன்பம். இன்பம்
அடைதற்குத் தகுதியற்றவாறு நோய் முதலியவற்றால் மெலிந்த பெண்,
‘போகம் இல்லாத பெண்.'
(க-து.)
உள்ளன்பில்லாதார் இடும் உணவு முதலாக இங்குக்
கூறப்பட்டவை நலந்தராதவை ஆகும்.