பக்கம் எண் :

48

நிறைந்த அன்பும் குழைவும் இடையறாத ஒழுக்கமும் வேண்டும், மருவுகுரு
ஆனவர்க்கு உபசாரம் உளவார்த்தை வழிபாடு அடக்கம் - பொருந்திய
ஆசிரியரிடம் இனிய முகமனுடன் கூடிய பேச்சும் வழிபாடும் அடக்கமும்
வேண்டும், காது ஆர் கருமை கண் மனையாள் தனக்கோ சயனகாலத்தில்
நய பாடணம் - காது வரையில் நீண்ட கரிய கண்களையுடைய
மனையாளிடமோ படுக்கையில் இனிய பேச்சு வேண்டும். வரும் கற்ற
பெரியோர் முதியர் ஆதுலர்க்கு எலாம் கருணை சேர் அருள் விதானம் -
நாடி வருகின்ற பெரியோர்கள் வயது முதிர்ந்தவர்களும் வறியோர்களும்
ஆகிய இவர்களிடம் மிகுதியும் இரக்கமும் பெருங்கொடையும் வேண்டும்,
நீதிபெறும் மன்னவரிடத்து அதிக பய விநயம் - அறநெறி வழுவா
அரசரிடம் மிகுந்த அச்சமும் வணக்கமும் வேண்டும், நெறியுடைய பேர்க்கு
இங்கிதம் - நன்னெறி செல்வோரிடம் இனியன செய்தல் வேண்டும், நேயம்
உள தமர் தமக்கு அகம் மகிழ்வுடன் பரிவு - நட்புடைய உறவினரிடம்
உளங்கனிந்த அன்பு வேண்டும், நேரலரிடத்தில் வயிரம் - பகைவரிடம்
மாறாத சினம் வேண்டும், ஆதி மனு நூல் சொலும் வழக்கம் இது ஆகும் -
பழைய மனுவினால் எழுதப்பெற்ற நூல் கூறும் முறைமை இதுவாகும்.

     (வி-ரை.) மனையாளிடம் படுக்கையறையில் இனிய மொழிவேண்டும்
என்பதனால் மற்ற வேளையிற் கூடாதென்பது கருத்தன்று. ‘காதல் இருவர்
கருத்து ஒருமித்து ஆதரவுபட்டதே இன்பம்' ஆகையால், முற்றிய இன்பம்
அடைவதற்கு மனைவியின் மகிழ்ச்சியும் வேண்டும் என ‘சயன காலத்தில்
நயபா டணம்' என்றார். பாடணம் - (வட) பேச்சு; (பாஷணம் என்பதன்
தற்பவம்). வயிரம் - நீங்காச் சினம்; இதனைச் செற்றம் எனவும் கூறுவர்.
பகைவர் மொழியால் ஏமாந்துபோதல் கூடாதென்பதற்கு இவ்வாறு கூறினார்.
‘தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்'
என்றார் வள்ளுவர்.

     (க-து.) இங்குக் கூறியவாறு நடந்துகொள்வது உலகியலுக்கு
நலந்தரும்.