பக்கம் எண் :

52

மற்றும்உயர் தண்டுலத் தோடுதவி டுமிகூடின்
     மல்கும்முளை விளைவிக் கலாம்!
  மனமொத்த நேயமொடு கூடியொருவர்க்கொருவர்
     வாழின்வெகு வெற்றி பெறலாம்!
அற்றகனி யைப்பொருத் தரிபிரமர் தேடரிய
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அற்ற கனியைப் பொருத்து அரிபிரமர் தேட அரிய
அமலனே - (மரத்திலிருந்து) அறுபட்ட பழத்தைத் (திரும்பவும் மரத்திலே)
சேர்த்த திருமாலும் பிரமனும் தேடியும் காணற்கு அருமையான தூயவனே!,
அருமை ......... தேவனே!, பல செத்தைகூடி ஒரு கயிறு ஆயின்
அதுகொண்டு திண்கரியையும் கட்டலாம் - பல வைக்கோல் தாள்கள்
சேர்ந்து ஒரு கயிறு ஆனால், அக் கயிற்றைக் கொண்டு வலிய
யானையையும் கட்டஇயலும், திகழ்ந்த பல துளிகூடி ஆறு ஆயின்
வாவியொடு திரள் ஏரி நிறைவிக்கலாம் - விளங்கும் பல நீர்த்திவலைகள்
கூடி ஆறு ஆனால் குளத்தையும் திரண்ட (பல) ஏரிகளையும் நிறையச்
செய்யலாம், ஒத்த நுண்பல பஞ்சு சேர்ந்து நூல்ஆயிடின் உடுத்திடும் கலை
ஆக்கலாம் - சமமான நுண்ணிய பல பஞ்சு கூடி நூலானால் அணியும்
ஆடையாக்கலாம், ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால் உயர்கவிகை
ஆ கொள்ளலாம் - உயர்ந்து வளர்ந்த கோலோடு துணியும் சேர்ந்தால்
உயர்ந்த குடையாகக் கொள்ளமுடியும், மற்றும் - மேலும், உயர்
தண்டுலத்தோடு தவிடு உமி கூடின் பல்கும் முளை விளைவிக்கலாம் -
மேம்பட்ட அரிசியும் தவிடும் உமியும் கூடியிருந்தால் (வளம்) மிகுந்த
முளையைத் தோற்றுவிக்கலாம், மனம் ஒத்த நேயமொடு ஒருவர்க்கு ஒருவர்
கூடி வாழின் வெகு வெற்றி பெறலாம் - உள்ளம் கலந்த அன்புடன்
ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ்ந்தால் பெரு வெற்றியை அடையலாம்.