பக்கம் எண் :

82

களின் இயலை அறிவதுதான் தாதுப் பரீட்சை. எவருக்கும் கோடை வறளை
மாரியெனும் காலங்களில் ஒரேவகையாக உடல் நிலை யிராது. நாடுதோறும்
தட்ப வெப்ப நிலை வேறுபடுவதால் மக்களின் உடல்நிலை ஒருவகையாக
இராது. ஒரே நாட்டினும் மக்களின் உடல்நிலை வேறு வேறு வகையாக
இருக்கும். ஆகையால், ‘காலத்தேசத்தோடு சரீர லட்சணம் அறிந்து' என்றார்.
சுத்தி செய்யாத மருந்துச் சரக்குகள் கெடுதியை விளைவிக்கும் மண்டூரம்
என்பது செங்கல்லிற் சிட்டம் பிடித்த கல்லைக்கொண்டு பிற மருந்துச்
சரக்குகளையும் சேர்த்துச் செய்யும் ஒருவகைப் பொடி; செந்தூரம் என்பது
இரும்பு கலந்த மருந்துப் பொடி. இவற்றைச் செய்யும் முறையை மருத்துவர்
வாயிலாக உணர்க. மூலிகை - வேர். நிகண்டு - அகராதி போன்ற ஒரு
நூல். ஏட்டுப் படிப்பைவிடக் கேள்வியே சிறந்தது என்பதை விளக்க,
‘ஆதிப் பெருங்கேள்வி யுடையன்' ஆக வேண்டும் என்றார். எந்நலம்
இருப்பினும் கைந்நலம் ஒன்றே மருத்துவர்க்குப் புகழ்தரும் என்பதைத்
தெரிவிக்க ‘அமிர்தகரனாய்' என்றார்.

          52. உண்மையுணர் குறி

சோதிடம் பொய்யாது மெய்யென்ப தறிவரிய
     சூழ்கிரக ணம்சாட்சி ஆம்!
  சொற்பெரிய வாகடம் நிசமென்கை பேதிதரு
     தூயமாத் திரைசாட்சி ஆம்!
ஆதியிற் செய்ததவம் உண்டில்லை என்பதற்
     காளடிமை யேசாட்சி ஆம்!
  அரிதேவ தேவனென் பதையறிய முதல்நூல்
     அரிச்சுவடி யேசாட்சி ஆம்!
நாதனே மாதேவன் என்பதற் கோருத்ர
     நமகசம கம்சாட்சி ஆம்!
  நாயேனை ரட்சிப்ப துன்பாரம்! அரியயன்
     நாளும் அர்ச் சனைசெய் சரணத்
தாதிநா யகமிக்க வேதநா யகனான
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!