பக்கம் எண் :

91

எதுகையும் மோனையும் சேராத செய்யுளும், காப்பு அமைவு இலாதது ஓர்
நந்தவனமும் - காவல் பொருந்தியிராத ஒரு பூங்காவும், நல்ல கரைஇலா
நிறை ஏரியும் - நல்ல கரையில்லாத நீர்நிறைந்த ஏரியும், கசடுஅறக் கற்காத
வித்தையும் - குற்றமின்றிக் கல்லாத கல்வியும், உபதேச காரணன் இலாத
தெளிவும் - கற்பிக்கும் ஆசிரியன் இல்லாத கலைத்தெளிவும், கோப்புஉள
விநோதம் உடையோர் அருகு புகழாத கோதையர்செய் கூத்தாட்டமும் -
கோவையான பலவகை விளையாட்டினர் அருகில் இருந்து புகழ்ந்து கூறாத
விறலியர் ஆடும் கூத்தும், குளிர் புனல் நிறைந்துவரும் ஆற்றோர
மதில்நின்று கோடு உயர்ந்து ஓங்கு தருவும் - குளிர்ந்த நீர் நிறைந்து
வரத்தக்க ஆற்றோரத்திலே இருந்து வளரும் நீண்ட உயர்ந்த
கொம்புகளையுடைய மரமும், ஆப்பது இல்லாத தேர் - சுள்ளாணி இல்லாத
தேரும், இவையெலாம் ஒன்று ஆகும் - இவை யாவும் ஒரேதன்மையுடையன (கெடுவன) ஆகும்.


     (வி-ரை.)
முதுமை + அரண் : மூதரண். அரணெனப்படுபவை மதிலும்
அகழியும் காவற்காடும் இயற்கையாய் அமைந்த மலையும் ஆகும்.
உபதேசகாரணன் - கற்பிக்குந் தலைவன். ‘கல்விக்கு அழகு கசடுஅற
மொழிதல், ‘ஆற்றங் கரையின் மரமும் அரசு அறிய வீற்றிருந்த வாழ்வும்
விழும்' என்பவை இங்கு நினைக்கத் தக்கவை.

     (க-து.)
எப்பொருளுக்கும் அழகும் ஆதரவும் வேண்டும்.

          58. இவையே போதும்

பொய்யாத வாய்மையும் சீலமும் சார்ந்துளோர்
     பூவலம் செயவேண் டுமோ?
  பொல்லாத கொலைகள விலாதநன் னெறியுளோர்
     புகழ்அறம் செயவேண் டுமோ?
நையாத காமத்தை லோபத்தை விட்டபேர்
     நல்லறம் செயவேண் டுமோ?
  நன்மனோ சுத்தியுண் டானபேர் மேலும்ஒரு
     நதிபடிந் திடவேண் டுமோ?