பக்கம் எண் :

110குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

கார்க்கொந் தளக்கோதை மடவியர் குழற்கூட்டு
   கமழ்நறும் புகைவிண்மிசைக்
கைபரந் தெழுவதுரு மாறிரவி மண்டலம்
   கைக்கொள விருட்படலம்வான்

போர்க்கின்ற தொக்குமது ராபுரி மடக்கிள்ளை
   பொன்னூச லாடியருளே
புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக் கொத்தகொடி
   பொன்னூச லாடியருளே.    
(5)

99.
தேர்க்கோல மொடுநின் றிருக்கோல முங்கண்டு
   சிந்தனை புழுங்குகோபத்
தீயவிய மூண்டெழுங் காமா னலங்கனற்
   சிகையென வெழுந்துபொங்கத்

தார்க்கோல வேணியர்த முள்ளமென வேபொற்
   றடஞ்சிலையு முருகியோடத்
தண்மதி முடித்ததும் வெள்விடைக் கொண்மணி
   தரித்ததும் விருத்தமாகக்

கார்க்கோல நீலக் கருங்களத் தோடொருவர்
   செங்களத் தேற்றலுமலர்க்
கட்கணை துரக்குங் கரும்புருவ வில்லொடொரு
   கைவிற் குனித்துநின்ற

    (3) கொந்தளக் கோதை மடவியர் - கூந்தலில் மாலையை அணிந்த மகளிர்; கோதை - மாலை. ரவிமண்டலம் - சூரிய மண்டலத்தை. இருட்படலம் - இருளின் பரப்பு. புகைக்கு இருட்படலம் உவமை.

    99. அம்பிகை திக்கு விசயம் செய்த காலத்துக் கைலைக்குச் சென்றபோது சிவபெருமான் முன் நின்றதும், அவர் அம்பிகையின்பாற் காதல் பூண்டதும் கூறப்படும்.

    (அடி, 1) கோபம் கைலைமேற் படையெடுத்து வந்தமை கருதி உண்டாயது. (பி- ம்.) ‘தீயணைய’. கோபத்தீ அவியக் காமத்தீ எழுந்ததென்றது ஒரு நயம். வெகுளியைக் காமம் வென்றது. (பி-ம்.) ‘காமானலங்கான்ற சிகையென வெழுந்து பொங்கும்’. ‘சிகையெழ’.

    (2) தாரை அணிந்த கோலத்தையுடைய வேணி; வேணி - சடை. காமாக்கினியால் சிவபிரானுக்கமும் மேருமலையும் ஒருங்கே உருகின. தடஞ்சிலை - பெரிய வில்லாகிய மேருமலை. காமமயக்கம் உடையவர்களுக்குச் சந்திரனும் விடைமணி யோசையும் துன்பத்தை மிகுவிப்பனவாதலின் அவ்விரண்டும் விருத்தமாயின; விருத்தம் - பொருந்தாதன; பகையென்றபடி.

    (3) நீலக் கருங்களம் - கருங்குவளை மலரைப்போன்ற கரிய கழுத்து; “குவளைக் களத்தம் பலவன்” (திருச்சிற். 33.) ஒருவர் - சிவபெருமான்.